பாதுகாப்பான கார் வாங்கனுமா..? 6 ஏர்பேக் வசதியுடன் குறைவான விலையில் கிடைக்கும் 5 SUV கார்கள்..!
புதிய கார் வாங்க வேண்டும் என விரும்புகிறவர்கள் எந்த கார் அதிக பாதுகாப்பை தருகிறது என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். காரில் எத்தனையோ நவீன வசதிகள் இருந்தாலும் அதில் பயணிக்கும் மக்களுக்கு எந்தளவிற்கு பாதுகாப்பு தருகிறது என்பதில்தான் அந்தக் காரின் விற்பனை அடங்கியுள்ளது. சமீப காலத்தில் அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக, பல பாதுகாப்பு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கார் உற்பத்தியாளர்கள் வழங்குகிறார்கள்.
எவ்வுளவோ பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், உங்கள் காரில் எத்தனை ஏர்பேக் இருக்கிறது என்ற கேள்வியை தான் எல்லா வாடிக்கையாளர்களும் இப்போது கேட்க ஆரம்பித்துள்ளார்கள். எனினும் ஏர்பேக் இருந்தால் மட்டும் அந்தக் கார் பாதுகாப்பானது என்று அர்த்தமில்லை. பல்வேறு வசதிகள் ஒருங்கிணைந்தே காரின் ஒட்டுமொத்த பாதுகாப்பை தீர்மானிக்கின்றன.
இந்தியாவில் நாளுக்கு நாள் SUV கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் சிறந்த 5 SUV கார்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
ஹூண்டாய் எக்ஸ்டர் : இந்தியாவில் உள்ள அனைத்து ஹூண்டாய் கார்களும் ஆறு ஏர்பேக்குகளுடன் வருகின்றன. இதில் ஹூண்டாய் எக்ஸ்டர் விலை குறைவான SUV கார். இந்த மைக்ரோ SUV காரின் ஆரம்ப மாடலில் கூட ஆறு ஏர்பேக் வசதி உள்ளது. 2024-ம் ஆண்டின் சிறந்த இந்திய கார் என்ற விருதைப் பெற்றுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் கார் ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.28 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.
ஹூண்டாய் வீனுயூ : ஏற்கனவே நாம் சொல்லியபடி, இந்தியாவில் அனைத்து ஹூண்டாய் கார்களும் ஆறு ஏர்பேக்குகளுடன் வருவதால் இதில் வீனுயூ-வும் விதிவிலக்கல்ல. இந்தக் காரின் பேஸ் மாடலை வாங்கினால் கூட, அதில் ஆறு ஏர்பேக்குகள் இருக்கும். ஹூண்டாய் வீனுயூ காரின் விலை ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.44 லட்சம் வரையில் கிடைக்கிறது.
கியா சோனெட் : ஹுண்டாய் நிறுவனம் போல் தற்போது கியாவும் தங்களது அனைத்து மாடல் கார்களுக்கும் ஆறு ஏர்பேக் வசதியை கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா சோனெட்டின் ஆரம்ப மாடலில் கூட ஆறு ஏர்பேக்குகள் உள்ளது. இந்தக் காரின் விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்கி ரூ.15.69 லட்சம் வரை உள்ளது.
டாடா நெக்ஸான் : இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் SUV காரான டாடா நெக்ஸானின் ஸ்டாண்டர்டு மாடலிலும் ஆறு ஏர்பேக் வசதி உள்ளது. முந்தைய மாடல்களில் இரண்டு ஏர்பேக் மட்டுமே இருந்தாலும், 2023-ம் ஆண்டில் இக்காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகமானபோது அனைத்து வேரியண்டிலும் ஆறு ஏர்பேக் வசதி கொடுக்கப்பட்டது. டாடா நெக்ஸான் காரின் விலை ரூ.8.15 லட்சம் முதல் ரூ.15.80 லட்சம் வரை உள்ளது.
மாருதி சுசுகி ஃப்ரான்ஸ் : இந்தப் பட்டியலில் மாருதியின் ஃபரான்ஸ் காரின் ஸ்டாண்டர்டு மாடலில் மட்டும்தான் ஆறு ஏர்பேக் வசதி இல்லை. ஆனால் இந்தக் காரின் உச்சப்பட்ச மாடலான ZETA மற்றும் ALPHA வேரியண்டில் ஆறு ஏர்பேக் வசதி உள்ளது. ஆறு ஏர்பேக் வசதி கொண்ட ஃப்ரான்ஸ் காரை வாங்க வேண்டுமென்றால் நீங்கள் ரூ. 10.55 லட்சம் (Zeta MT மாடல்) செலவழிக்க வேண்டும்.