பிரித்தானியா இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தம்
பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியா இந்தியா இடையிலான பேச்சுவார்த்தைகள்
பிரித்தானியாவும் இந்தியாவும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றன.
விடயம் என்னவென்றால், இரு தரப்பினருமே தங்கள் நாட்டுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்று பார்க்கிறார்கள். இந்தியா 100 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய முதலீட்டை எதிர்பார்க்கிறது. பிரித்தானியா, சரக்குகள், சேவைகள் மற்றும் முதலீடுகளில் தன் தரப்புக்கு லாபம் கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது.
விளைவு, இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடத்தியும், எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.
நெருங்கிவரும் தேர்தல்கள்
இந்தியாவில் இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு, மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் பிரச்சாரம் துவங்கியபின் பேச்சுவார்த்தைகளைத் தொடரமுடியாது என்பதால், சமீபத்தில் பிரித்தானிய தரப்பு பிரதிநிதிகள் அவசர அவசரமாக இந்தியா சென்றார்கள்.
எப்படியாவது தேர்தலுக்கு முன் வர்த்தக ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என அவர்கள் விரும்பினாலும், பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவையும் எட்ட முடியவில்லை.
இதற்கிடையில், பிரித்தானியாவும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. ஆக மொத்தத்தில், இரு நாடுகளிலும் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, பேச்சுவார்த்தைகளை தொடரமுடியாத நிலை உருவாகியுள்ளது.
ஆகவே, தேர்தல் முடியும் வரையில் இரு நாடுகளுக்குமிடையிலான, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.