பிரான்சில் படகுகளில் புலம்பெயர் மக்களின் வருகை இனி அதிகரிக்கும்: அமைச்சர்கள் அச்சம்
பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டியின் போது சிறிய படகுகள் ஊடாக நாட்டுக்குள் கடக்கும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அமைச்சர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கண்காணிக்கும் பொலிசார்
புலம்பெயர் மக்கள் தொடர்பில் கடற்பகுதியை கண்காணிக்கும் பொலிசார் கலேஸிலிருந்து பாரிஸுக்குத் திருப்பி விடப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, நார்மண்டி கடற்கரையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று உள்விவகார அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.
இது சட்டவிரோத புலம்பெயர் மக்களின் வருகையை கட்டுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். புலம்பெயர் மக்களை கரை சேர்க்கும் சட்டவிரோத குழுக்களின் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் பவுண்டுகள் வரையில் பிரித்தானியா செலுத்தி வருகிறது.
புலம்பெயர் மக்களின் வருகையும்
மட்டுமின்றி, ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்படும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பிரித்தானிய பாதுகாப்பு சேவையும் களமிறங்க உள்ளது.
சுமார் 15 மில்லியன் பார்வையாளர்கள் வருகையை எதிர்பார்க்கும் பிரான்ஸ் நிர்வாகம், பாரிஸ் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்கரைகளில் இருந்து தலைநகருக்கு பொலிசாரை அனுப்பி வருகிறது.
பொதுவாக கோடைகாலத்தில் தான் புலம்பெயர் மக்களின் வருகையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது பொலிஸ் நடமாட்டமற்ற கடற்கரைகள் புலம்பெயர் மக்களுக்கு வாய்ப்பாக அமையும் என்றே அமைச்சர்கள் அஞ்சுகின்றனர்.