தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? முழு விவரம் இதோ..

நாடே ஆவலுடன் உற்று நோக்கி இருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இன்று மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி உடனேயே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த விதிகள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை அமலில் இருக்கும். இதனால் நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகளை உருவாக்கியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் நிதி மானியங்களை அல்லது புதிய திட்டங்களை அறிவிக்கவோ அதற்கான வாக்குறுதிகளை வழங்கவோ கூடாது. ஆனால் பழைய நிதியுதவி திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசு ஊழியர்களைத் தவிர, பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சகர்கள் எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டவோ தொடங்கி வைக்கவோ முடியாது. அரசு அதிகாரிகள் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டால் புதிய சாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் வழங்குதல் போன்றவை தொடர்பாக எந்த வாக்குறுதியையும் வழங்க முடியாது.

அரசு அல்லது பொது நிறுவனங்களில் தற்காலிக நியமனங்கள் தடை செய்யப்படும். ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்ககூடாது என்பதற்காக இந்த உத்தரவு பின்பற்றப்படும்..

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தொகுதி நிதியில் இருந்து செலவு செய்ய முடியாது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு அரசு இயந்திரங்கள் அல்லது பணியாளர்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது,

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அதிகாரபூர்வ விமானங்கள், வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அரசுப் போக்குவரத்தை ஆளும் கட்சியின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியாது.

தேர்தல் கூட்டங்களுக்கு செல்லும் போது அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள், நிபந்தனைகள் செயல்பாட்டில் இருக்கும்.

அரசு ஓய்வு இல்லங்கள், பங்களாக்கள் அல்லது பிற அரசு விடுதிகளை ஆளுங்கட்சி வேட்பாளர்கள் பயன்படுத்தக் கூடாது. மேலும் அவற்றை பிரச்சார அலுவலகங்களாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது தேர்தல் பிரசாரத்திற்காக பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் அரசு செலவில் விளம்பரங்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் செய்திகள் மற்றும் ஆளுங்கட்சியின் சாதனைகள் தொடர்பான விளம்பரங்களை ஆளும் கட்சிக்கு சாதகமாக பரப்புவதற்காக அதிகாரப்பூர்வ ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *