வெளியானது 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு… உடனடியாக அமலுக்கு வந்த நடத்தை விதிகள் என்னென்ன?
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி மத்திய மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணத்தை ரொக்கமாக எடுத்துச்செல்லமுடியாது. அப்படி எடுத்துச்செல்லப்படும்போது முறையான ஆவணங்களை உடன் எடுத்துச்செல்லவேண்டியது கட்டாயமாகிறது.
மாநில அரசாங்கள் மற்றும் கலால் வரித்துறை சார்பில் அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகள் மட்டுமே இயங்க முடியும். இவை தவிர்த்து மாநில தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அனைத்து மாவட்டங்களும் வந்துவிடும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுவர்.
திடீரென குறிப்பிட்ட இடங்களை சோதனை செய்வதற்கான பறக்கும் படையினர் தயார் நிலையில் இருப்பார்கள். மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனத் தணிக்கையிலும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட இருக்கின்றனர்.
வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுகள், நலத்திட்டங்களை பறிமுதல் செய்யும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் புதிய நிதியுதவித் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டக் கூடாது. மத்திய, மாநில அமைச்சர்கள் புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட உத்தரவாதங்களை அளிக்கக் கூடாது. தேர்தல் பிரசாரம் தொடர்பான பணிக்கு அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பயன்படுத்தக் கூடாது. ஆளுங்கட்சியினர், அரசு விமானங்கள், தளவாடங்கள், வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது.
பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் அனைத்துக் கட்சியினருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். ஹெலிபேட், விமானம் இறங்குமிடங்கள் அனைத்துக் கட்சியினரும் பயன்படுத்தும் வகையில் இருக்கவேண்டும். அரசு விருந்தினர் மாளிகைகள், பங்களாக்கள், அரசு தங்குமிடங்களில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தத் தடை விதிக்கப்படும்.
அரசு விடுதிகள், தங்குமிடங்களை தேர்தல் பிரசாரத்திற்கு ஆளுங்கட்சி பயன்படுத்தக் கூடாது, அதேநேரம் கட்சி தொடர்பான விளம்பரங்களுக்கு அரசு நிதியை பயன்படுத்தக் கூடாது.
அரசு ஊடகங்கள் மூலம் அரசின் சாதனைகளை வெளியிடக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகும் உள்ளிட்டவை நடத்தை விதிகளில் முக்கியானவை.
தேர்தலின்போது பணப்பட்டுவாடா நடைபெறுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 11 மாநில தேர்தலில் ரூ.3,400 கோடி சிக்கியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலின்போது பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில், ATM-யில் 6 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் புகார்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்படுவார் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.