தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. டாடா குழுமத்தின் மெகா திட்டம்..!!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் தனது வர்த்தகத்தைப் பல துறையில் விரிவாக்கம் செய்திருக்கும் வேளையில், பெரும் தொகையைத் தனக்கு சாதகமான இடத்தில் முதலீடு செய்து வருகிறது. அப்படி தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டில் மட்டுமே சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்தும், முதலீடு செய்யவும் உறுதி அளித்துள்ளது.
டாடா குழுமத்தின் பல வர்த்தகத்திற்கு தமிழ்நாடும், தமிழ் மக்களும் முக்கியமான காரணமாக இருந்துள்ளனர், உதாரணமாக டாடா குழுமத்தில் அதிக லாபம் அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டைட்டன் ஓசூரில் தமிழ்நாடு அரசுடன் கூட்டணி அமைத்து உருவாக்கப்பட்டது. இன்றளவும் டைட்டன் நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு முக்கிய பெரும் பங்குதாரராக உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய டெலிவரி சென்டர் சென்னையில் பிரம்மாண்ட கட்டிடத்தில் உள்ளது, இதேபோல் டாடா குழுமம் புதிதாகத் துவங்கிய வர்த்தக பிரிவான டாடா எலக்ட்ரானிக்ஸ் பெரும் நம்பிக்கையுடன் ஓசூரில் துவங்கப்பட்டது. இப்படி பல துறையில் பல தொழில்களின் வளர்ச்சிக்கு டாடா குழுமத்திற்குப் பக்கபலமாக இருந்துள்ளது தமிழ்நாடு.
இதைத் தொடர்ந்து டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து டாடா குழுமத்தின் முக்கியமான முதலீடுகள், புதிய வர்த்தகங்கள் தென்னிந்தியாவை நோக்கி அதிகரித்துள்ளது. இதேவேளையில் சந்தையின் நிலவரத்தைப் பொருத்து பல முதலீடுகள் வட இந்திய மாநிலங்களுக்கும் சென்றுள்ளது உதாரணமாக செமிகண்டக்டர்.
இந்த நிலையில் கடந்த 3 வருடத்தில் டாடா குழுமம் தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது தெரியுமா..?
டாடா பவர் – 70000 கோடி ரூபாய் (தமிழ்நாடு முழுவதும்)
டாடா எலக்ட்ரானிக்ஸ் – 16,766 கோடி ரூபாய் (ஓசூர்)
டாடா மோட்டார்ஸ் – 9000 கோடி ரூபாய் (ராணிப்பேட்டை)
டாடா சோலார் – 3000 கோடி ரூபாய் (திருநெல்வேலி)
டாடா கெமிக்கல் – 1000 கோடி ரூபாய் (ராமநாதபுரம்)
டிசிஎஸ் சிறுசேரி – 876 கோடி ரூபாய் (சென்னை)
வோல்டாஸ் ஏசி தொழிற்சாலை – 500 கோடி ரூபாய் (சென்னை)
இவை இல்லாமல் தமிழ்நாட்டில் சுமார் 71 ஐடிஐ-களை இன்டஸ்ட்ரீஸ் 4.0 தளத்திற்கு மேம்படுத்த உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடத்தில் ஹூண்டாய், வின்பாஸ்ட், டாடா மோட்டார்ஸ் என 3 பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் சுமார் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் ஈடுபட பலரும் முயற்சி செய்து தோல்வி அடைந்த நிலையில், தைவான் PSMC உடன் கூட்டணி சேர்ந்து குஜராத்தில் 91000 கோடி ரூபாயில் புதிய செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தளத்தை அமைக்க உள்ளது. டாடா குழுமத்தின் செமிகண்டக்டர் துறையின் நுழைவு, இந்தியாவின் 4வது தொழிற்துறை புரட்சிக்கு வழிவகுத்துள்ளது.