சாதித்த தமிழன்.. 500 விக்கெட்டுக்கு 500 தங்கக்காசு.. டிஎன்சிஏ கொடுத்த சர்ப்ரைஸ்.. நெகிழ்ந்த அஸ்வின்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினுக்கு டிஎன்சிஏ தரப்பில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலமாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தியாவில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையையும், தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இதன் மூலமாக அனில் கும்ப்ளேவிற்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்.

ஸ்ரீகாந்த், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், சடகோபன் ரமேஷ், பாலாஜி என்று தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், அஸ்வின் ஏற்படுத்திய தாக்கத்தை எந்த வீரரும் ஏற்படுத்தியதில்லை. இதனால் அஸ்வினின் சாதனையை பாராட்டும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

டிஎன்சிஏ சார்பாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதை பாராட்டும் வகையில், 500 தங்கக்காசுகள் மூலம் “500” என்று எழுதப்பட்டு அஸ்வினுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதை பாராட்டும் வகையில் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரவிச்சந்திரன் அஸ்வின், அவர் மனைவி பிரீத்தி, இரு மகள்கள் கலந்து கொண்டு பரிசினை பெற்று கொண்டனர்.

அதேபோல் டிஎன்சிஏ சார்பாக ஐசிசி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், இந்திய முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே டிஎன்சிஏ சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *