எனக்கா டீமில் இடமில்லை.. ஒதுக்கி வைத்த இந்திய அணி.. ஆயுதத்தை கையில் எடுத்த கே எல் ராகுல்
இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஒருநாள் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கும் கே எல் ராகுல், டி20 அணியில் ஓரங்கட்டப்பட்டு விட்டார். அவர் நிதான ஆட்டம் ஆடுவதாகக் கூறி அவரை டி20 அணியில் தேர்வு செய்வதை நிறுத்தி விட்டது தேர்வுக் குழு.
2024 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியில் எப்படியாவது இடம் பெற வேண்டும் என முடிவு செய்து இருக்கிறார் கே எல் ராகுல். அதற்கு அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஐபிஎல் தொடர் மட்டுமே.
2024 ஐபிஎல் தொடரில் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக ரன் குவித்தால் எப்படியும் டி20 அணியில் தேர்வு செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கணக்கு போட்டு இருக்கிறார் கே எல் ராகுல். ஆனால், இந்திய டி20 அணியில் பேட்ஸ்மேன்களுக்கான ஒவ்வொரு இடத்துக்கும் இரண்டு மூன்று வீரர்கள் போட்டி போடும் நிலையே உள்ளது.
இந்திய டி20 அணியில் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா உறுதியாகி விட்ட நிலையில், மாற்று வீரர்களாக சுப்மன் கில், ருதுருராஜ் கெய்க்வாட் உள்ளனர். அடுத்து மூன்றாம் வரிசையில் விராட் கோலி ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை விராட் கோலி டி20 அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் கூட மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய திலக் வர்மா, சுப்மன் கில் இடையே போட்டி நிலவும்.
அடுத்து நான்காம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார். அடுத்து ஐந்தாம் மற்றும் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்ய ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) ஆகியோரிடையே போட்டி இருக்கிறது.
இப்படி கடும் போட்டி இருக்கும் நிலையில் மாற்று வீரராக மட்டுமே கே எல் ராகுலால் டி20 அணியில் இடம் பெற முடியும். அதன் மூலம் எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் கே எல் ராகுல் அணியில் வாய்ப்பு பெற முடியும். எனவே, சூர்யகுமார் யாதவின் நான்காம் வரிசையை குறி வைத்து இருக்கிறார் கே எல் ராகுல்.
இதற்கு முன்பு இந்திய ஒருநாள் அணியில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபித்தே தனது இடத்தை நிரந்தரமாக மாற்றிக் கொண்டார் கே எல் ராகுல். இப்போது டி20 அணியிலும் அதே உத்தியை கடை பிடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை ஐபிஎல் தொடரில் நான்காம் வரிசையில் களமிறங்கி 11 போட்டிகளில் 324 ரன்கள் குவித்துள்ளார் கே எல் ராகுல். அதன் சராசரி 46.29 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 130 ஆகும். இதில் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதே அவரின் பெரிய பலவீனமாக உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் அதை மட்டும் சரி செய்தால் அவருக்கு இந்திய டி20 அணியில் மாற்று வீரராக இடம் கிடைக்கக் கூடும்.