3 ஆண்டுகள் சிறைத் தண்டனை! தீர்ப்பை கேட்டதும் பொன்முடி மனைவி விசாலாட்சி நீதிமன்றத்தில் அழுகை!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியதும் அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி கதறி அழத் தொடங்கியிருக்கிறார்.
நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாலாட்சி அழுக ஆரம்பித்த நிலையில் அவரை அங்கிருந்த அவரது தரப்பு வழக்கறிஞர்கள் சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார்கள். அபராதத் தொகையோடு தண்டனை முடிந்துவிடும் என எதிர்பார்த்த விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றதும் பதைபதைத்து போய்விட்டார். அதேபோல் தான் அமைச்சர் பொன்முடியும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற தீர்ப்பை கேட்டதும் கடும் அதிர்ச்சியுற்றிருக்கிறார்.
என்ன செய்வது எனத் தெரியாமல் கணவனும் மனைவியும் பரிதவித்து நின்ற நிலையில், மேல்முறையீடுக்கு வாய்ப்பு அளித்து தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். இதனால் சற்று நிம்மதியடைந்த அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்கறிஞர்களும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவும் அடுத்தக்கட்டப் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
பொன்முடி மனைவி விசாலாட்சியை பொறுத்தவரை மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். பொன்முடி இறை மறுப்பாளராகவும் தன்னை நாத்திகராகவும் அடையாளப்படுத்திக் கொள்பவர். ஆனால் அவருக்கு நேரெதிராக அவரது மனைவி விசாலாட்சி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்முடி, விசாலாட்சியோடு அவரது இளைய மகனும் மருத்துவருமான அசோக் சிகாமணியும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
தண்டனை விவரத்தை வாசிப்பதற்கு முன்னர் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என பொன்முடியிடமும் அவரது மனைவி விசாலாட்சியிடமும் நீதிபதி ஜெயச்சந்திரன் வினவினார். அப்போது எதுவும் பேசாமல் வணக்கம் வைத்தப்படி மட்டும் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் நீதிபதி முன்பு நின்றனர். இவர்கள் இருவர் சார்பாக அவர்களது வழக்கறிஞர்கள் மருத்துவ அறிக்கையை சமர்பித்து தண்டனைக் காலத்தை குறைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தனர்.