தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் : குறைந்தபட்ச ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்..!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை 2 கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இதனிடையே ‘உழவர் நீதி’, ‘இளைஞர் நீதி’, ‘மகளிர் நீதி’ உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை, பணிபுரியும் மகளிருக்காக சாவித்ரிபாய் புலே தங்கும் விடுதி, மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது
இந்நிலையில் நேற்று ‘தொழிலாளர் நீதி’ என்ற தலைப்பின் கீழ் தொழிலாளர்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
1. சுகாதார உரிமை
தொழிலாளர்களுக்கான சுகாதார உரிமைகள் குறித்த புதிய சட்டம் உருவாக்கப்படும். தேவையான பரிசோதனைகள், இலவச சிகிச்சை, மருந்துகள், நோய் தடுப்பு சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை முறைகள் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த திட்டத்தின்கீழ் செய்து கொடுக்கப்படும்.
2. உழைப்புக்கு மரியாதை
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் உட்பட தேசிய அளவில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 400 ஆக உயர்த்தப்படும்.
3. நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம்
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் கொண்டுவரப்படும். பொது உட்கட்டமைப்பு உருவாக்கப்படும். சமூக சேவை அமைப்புகள் பலப்படுத்தப்படும்.
4. சமூக பாதுகாப்பு
அமைப்புசாரா துறையில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.
5. பாதுகாப்பான வேலைவாய்ப்பு
பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் விரோத சட்டங்களை காங்கிரஸ் மறு ஆய்வு செய்யும். தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும். முக்கிய அரசுப் பணிகளில் வேலைவாய்ப்புக்கான ஒப்பந்த முறை நிறுத்தப்படும். ஒப்பந்த தொழிலாளர் முறை, கடைசி விருப்பமாக மட்டுமே இருக்கும். ஒப்பந்த தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் தனியார் துறைக்கும் கட்டாயமாக்கப்படும்.