வெயில் காலத்தில் கருவாடு சாப்பிட்டால் தோல் அரிப்பு ஏற்படுமா?
சிறுமீன்களை காயவைத்து வரும் கருவாடு பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் அதேவேளையில் உடல் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கவனமும் தேவை. முதலில் நன்மைகளை பார்த்துவிடலாம். எல்லா மாமிசங்களையும் விட அதிக புரதம் இருப்பது கருவாட்டில் தான். வெறும் 100 கிராம் கருவாடு எடுத்துக் கொண்டால் அதில் ஏறத்தாழ 70 கிராம் வரை புரதமும், அதிகபட்சம் 5 கிராம் வரை கொழுப்பும் இருக்கிறது. இதுதவிர பொட்டாசியம், சோடியம் எல்லாம் இதில் இருக்கிறது. கொழுப்பு அதிகம் இல்லாத மாமிச உணவை தேடுபவர்களுக்கு கருவாடு சிறந்தது. ஆன்டிஆக்சிடன்டுகளும் இருக்கின்றன.
யார் எல்லாம் கருவாடு சாப்பிடலாம்?
பொதுவாக சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் கருவாடு உடனடியாக சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். உடல்நலம் குன்றி நாக்கில் எந்த சுரணையும் இல்லை என நினைப்பவர்கள் கருவாட்டை காரசாரமாக வைத்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி உங்களை ஆட்கொள்ளும். உடல் ஆரோக்கியம் பெறும் முயற்சியில் பெரும் முன்னேற்றமும் உங்களுக்கு கிடைக்கும். கருவாடு சாப்பிட்டால் எலும்பு, பற்கள் எல்லாம் உறுதியடைவதோடு வயிற்றில் இருக்கும் பூச்சிகளும் வெளியேறும்.
பெண்களுக்கு கருப்பை, நீர்ப்பை, சினைப்பை பிரச்சினைளுக்கு கருவாடு அருமருந்து. பால் அதிகம் சுரக்க வேண்டும் என பச்சிளம் தாய்மார்கள் பால் சுறா கருவாடு சாப்பிடலாம். கொடுவா மீன் கருவாடு, திருக்கை மீன் கருவாடு என ஒவ்வொன்றிலும் ஒருவகையான சத்துகள் நிரம்பியிருக்கின்றன. சில மீன்களை மீனாக சாப்பிடுவதைக் காட்டிலும் கருவாடாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது. கெளுத்தி மீனை விட கெளுத்தி கருவாட்டில் சத்து அதிகம், சீலா மீனை விட சீலா மீன் கருவாடு சத்து அதிகம்.
யார் கருவாடு சாப்பிடக்கூடாது?
பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்து குளியல் போட்ட அன்று கருவாடு சாப்பிடக்கூடாது. சைனஸ், ஆஸ்துமா இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுரையின்படி கருவாடு எத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் கருவாடு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையின்றி கருவாடு எத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் கருவாட்டில் உப்பு அதிகமாக இருக்கும். சருமநோய் இருப்பவர்கள் கருவாட்டை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. அதுவும் கோடை காலத்தில் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள். மீறி சாப்பிட்டால் நமைச்சல், அரிப்பு எல்லாம் அதிகமாகும்.