வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டாம்!
ஒவ்வொருவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் இரவில் நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு நாம் காலையில் சாப்பிடுகிறோம். ஏற்கனவே நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். எனவே, வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும் என்பதால் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரவு முழுவதும் வெறும் வயிறாக இருப்பதால் நமது வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் மட்டங்களை அடுத்த நாளுக்குத் எடுத்து செல்ல சரியான உணவு அவசியம். எனவே காலையில் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் அதிக கவனம் வேண்டும்.
காலையில் சில உணவுகள் வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை செரிமான பிரச்சினை, வீக்கம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும். அமில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. நல்ல செரிமானத்தை கொடுத்து, காலை முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. காலையில் நீங்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
எலுமிச்சை நீரில் தேன்: எலுமிச்சம்பழ நீரில் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் கொழுப்பை எரிக்க உதவும் என பலர் நம்புகின்றனர். இதனால் காலையில் வெறும் வயிற்றில் இதனை சாப்பிடுகின்றனர். ஆனால் அது உடலுக்கு நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. தேனில் அதிக கலோரிகள் உள்ளன, மேலும் சுத்தமான தேனைக் கண்டுபிடிப்பது கடினம். பெரும்பாலானவர்கள் தேன் என்ற பெயரில் சர்க்கரை மற்றும் அரிசி சிரப்பை சாப்பிடுகிறார்கள். இது உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் சுத்தமான ஒரிஜினல் தேன் சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.
டீ மற்றும் காபி: காலையில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி சாப்பிடுவது வயிற்றில் அமிலங்களைத் தூண்டுகிறது, இது உங்கள் வயிற்றில் செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். காலையில் உங்கள் கார்டிசோல் அளவுகள் ஏற்கனவே அதிகமாக இருக்கும், அந்த சயமத்தில் டீ அல்லது காபி சாப்பிட்டால் அது மேலும் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே காலையில் எழுந்ததும் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் கழித்து இவற்றை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர்.
பழங்கள் மற்றும் ஜூஸ்: மற்ற உணவுப் பொருட்களை ஒப்பிடும்போது பழங்கள் மிக விரைவாக ஜீரணமாகும். ஆனால் சில சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். அதே போல கார்பனேற்றப்பட்ட பானங்கள் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது. மேலும் காலையில் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இவை அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.