ரிஷப் பந்த் மட்டுமில்லை! இந்த 6 வீரர்களும் ஐபிஎல் 2024ல் மீண்டும் விளையாட உள்ளனர்!

ஐபிஎல் 2024 போட்டிகள் இன்னும் 5 நாட்களில் துவங்க உள்ளது. மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் கடந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடவில்லை. ஏறக்குறைய 15 மாதங்கள் கிரிக்கெட்டை தவறவிட்ட அவர் இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். தற்போது பிசிசிஐ அவர் கிரிக்கெட் விளையாட முழு அனுமதி அளித்துள்ளது. இவரது கம்பேக்கை பார்க்க பலரும் ஆவலுடன் உள்ளனர். மேலும் ஐபிஎல்லில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் களமிறங்க உள்ளார் ரிஷப் பந்த். இவரை போலவே கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சில காரணங்களால் விளையாடாமல் போன சர்வதேச நட்சத்திரங்கள் இந்த ஆண்டு கம்பேக் கொடுக்க உள்ளனர்.

ஜஸ்பிரித் பும்ரா

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 முழு சீசனையும் தவறவிட்டார். கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை முதல் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை தற்போது சிறப்பாக பந்துவீசி வருகிறார் பும்ரா. இந்த தொடரில் அதில் அவர் விளையாடிய நான்கு டெஸ்டில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதனால் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சை பார்க்க மும்பை ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஷ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தனது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி சில சதங்கள் அடித்தார். ஆனால் சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் ரன்கள் தவறி, அணியில் தனது இடத்தை பறி கொடுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். மேலும் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தையும் இழந்துள்ளார். சமீபத்தில் நடந்த ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி கம்பேக் கொடுத்துள்ள ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்க உள்ளார்.

பாட் கம்மின்ஸ்

ஐபிஎல் 2024 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணி வீரர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கம்மின்ஸ் ஐபிஎல் 2023ல் இருந்து விலகி சர்வதேச போட்டிகளுக்காக கவனம் செலுத்த விரும்பினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை போன்ற முக்கிய ஐசிசி பட்டங்களை வென்றுள்ளார் கம்மின்ஸ். இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அவர் 20.5 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லில் விளையாட உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் சென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஸ்டார்க். 24.75 கோடி ரூபாய்க்கு கேகேஆர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் ஸ்டார்க்.

கேன் வில்லியம்சன்

ஐபிஎல் 2023ன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய போது காயம் காரணமாக முழு சீசனில் இருந்தும் விலகினார் கேன் வில்லியம்சன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் விளையாடாமல் இருந்த வில்லியம்சன் உலகக் கோப்பையின் சில போட்டிகளில் விளையாடினார். தற்போது ஜிடிக்காக இந்த ஆண்டு விளையாட உள்ளார்.

ஜானி பேர்ஸ்டோவ்

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தார் ஜானி பேர்ஸ்டோவ். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பேர்ஸ்டோவ் கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் விளையாடவில்லை. இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *