2 ரூபா விலை குறைப்புக்கு பின்.. பெட்ரோல், டீசல் விலை எங்கு சீப், எங்கு காஸ்ட்லி..?

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL) ஆகிய மூன்று மத்திய அரசு நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையில் பெரிய சரிவுகள் ஏதும் இல்லாத போதிலும் தடாலடியாகக் கடந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தலா 2 ரூபாய் குறைத்தன. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு செய்யப்பட்ட முதல் விலை குறைப்பு.

இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் என மத்திய அரசு அறிவித்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு ஊரிலும் பெட்ரோல் டீசல் விலை மாறுபடுகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது பெட்ரோல் டீசல் விலை எங்கு அதிகமாக உள்ளது, எங்குக் குறைவாக உள்ளது என்பதை ஒரு ரவுண்டு பார்ப்போம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலத்தில் தான் நாட்டிலேயே அதிகமாக உள்ளன. இந்த விலை மாற்றத்திற்கு உள்ளூர் விற்பனை வரி அல்லது VAT விகிதங்களில் உள்ள வேறுபாடுகள் முக்கிய காரணம். இதேபோல் எரிபொருளின் போக்குவரத்து செலவுகளும் இதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

மேலும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எரிபொருள் விலை மிகவும் குறைவாக உள்ளன என்று எண்ணெய் துறை தரவுகள் காட்டுகின்றன.

இந்த விலை குறைப்பு எரிபொருள் பயன்படுத்துபவர்களுக்கு நிவாரணம் அளித்த போதிலும், சில மாநிலங்களில் அதிக வாட் வரி காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 க்கு மேல் தொடர்ந்து இருக்கின்றன.

YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSRCP ஆட்சியிலுள்ள ஆந்திரப்பிரதேசத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.109.87 என்ற அதிகப்படியான விலையில் விற்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியிலுள்ள கேரளாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.54 க்கு விற்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியிலுள்ள தெலங்கானாவில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.39 ஆக உள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிலவற்றிலும் விலை அதிகமாகவே உள்ளது – போபாலில் லிட்டருக்கு ரூ.106.45, பாட்னாவில் (ஜே.டியு.வுடன் கூட்டணி ஆட்சி) ரூ.105.16, ஜெய்ப்பூரில் ரூ.104.86 மற்றும் மும்பையில் ரூ.104.19 க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தில் லிட்டருக்கு ரூ.103.93 க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.100 க்கு மேல் பெட்ரோல் விலை உள்ள பிற மாநிலங்கள் ஒடிசா (புவனேஸ்வரில் ரூ.101.04), தமிழ்நாடு (சென்னையில் ரூ.100.73), மற்றும் சட்டீஸ்கர் (ராய்ப்பூரில் ரூ.100.37) விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் குறைவான பெட்ரோல் விலை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் முதலிடத்தில் உள்ளன. இங்கு லிட்டர் பெட்ரோல் ரூ.82 க்கு கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து சில்வாசா மற்றும் டாமனில் லிட்டர் பெட்ரோல் ரூ.92.38 முதல் ரூ.92.49 வரை உள்ளது.

பிற சிறிய மாநிலங்களில் VAT வரி குறைவாக இருக்கும் காரணமாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது – டெல்லி (லிட்டருக்கு ரூ.94.76), பனாஜி (லிட்டருக்கு ரூ.95.19), ஐஸ்வால் (லிட்டருக்கு ரூ.93.68), மற்றும் கவுகாத்தி (லிட்டருக்கு ரூ.96.12). வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவை பெட்ரோல் விலை குறைவாக உள்ள மாநிலங்களாக உள்ளன.

டீசல் விலையிலும் இதே போன்ற நிலை காணப்படுகிறது, ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் லிட்டர் டீசல் ரூ.97.60 க்கு விற்கப்படுகிறது, இதனைத் தொடர்ந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் லிட்டர் ரூ.96.41, ஹைதராபாத்தில் ரூ.95.63 மற்றும் ராய்ப்பூரில் ரூ.93.31 ஆகிய விலையில் டீசல் விற்கப்படுகிறது.

பாஜக ஆளும் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92 முதல் ரூ.93 வரை உள்ளது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்டிலும் இதே விலை வரம்பில் உள்ளது.

அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் டீசல் விலை மிகக் குறைவாக, லிட்டருக்கு சுமார் ரூ.78 க்கு கிடைக்கிறது. மெட்ரோ நகரங்களில் VAT வரி குறைவாகக் கொண்ட டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.87.66 க்கு விற்கப்படுகிறது, அதே சமயம் கோவாவில் லிட்டர் டீசல் விலை ரூ.87.76 ஆகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *