ஐடி நிறுவனங்களில் தலைதூக்கும் புதிய பிரச்சனை.. உஷாரா இருங்க மக்களே..!!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, HCL டெக் ஆகிய நிறுவனத்தில் மட்டும், டிசம்பர் காலாண்டின் இறுதியில், மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50,000 க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
இதுவே பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் மறுபுறம், கடந்த ஒரு வருடத்தில் cxo பிரிவில் இருக்கும் அதிகாரிகளும், மூத்த அதிகாரிகளும் அதிகளவில் பணியில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன் தாக்கம் தற்போது மெல்ல மெல்ல தெரிய துவங்கியுள்ளது.
ஐடி நிறுவனங்களில் தற்போது இடைநிலை மற்றும் மூத்த அதிகாரிகள் கடும் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் புதிய வர்த்தகத்தைப் பெறுவதிலும், அதை முறையாக நிர்வாகம் செய்து டெலிவரி செய்வதிலும் கடுமையான பிரச்சனை நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சனைகள் அதிகமாக Cloud Migration திட்டங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு திட்டத்தில் இடைநிலை மற்றும் மூத்த அதிகாரிகள் இல்லாமல் இருந்தால் வாடிக்கையாளர்களின் வணிகத்திற்கு அவசியமான பல தசாப்தங்களாகத் திரட்டப்பட்ட நிறுவன அறிவு அணியில் இல்லாமல் போகும், இது வர்த்தகத்தை இழக்கும் வரையிலான பெரும் பிரச்சனைக்குக் கொண்டு செல்லும்.
இடைநிலை மற்றும் மூத்த அதிகாரிகளின் அனுபவம் இல்லாத பட்சத்தில் பல முக்கியக் கருவிகளைப் (Tools) பயன்படுத்துதல், செயல்முறைகளைப் பின்பற்றுதல், நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் ஆபத்து கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தீர்வுகளை வடிவமைத்து, மீண்டும் செயல்படுத்துவதற்கான செயல்முறைகள் குறித்த அறிவு இல்லாமல் போகும்.
எந்தொரு வர்த்தகமும் ஆர்டர் பெற்ற உடன் அதனை முறையாக டெலிவரி செய்வதில் தான் அடுத்தடுத்த வர்த்தகம் கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் இங்கு இடைநிலை மற்றும் மூத்த அதிகாரிகள் பணியைச் செவ்வெனச் செய்ய ஆட்கள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் பெரிய பெரிய திட்டங்களை இழந்து பணிநீக்கத்திற்குத் தள்ளப்படும் பிரச்சனை உருவாகிறது.
அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான ஹெச்எஃப்எஸ் ரிசர்ச்-ன் (HfS Research) தலைமை செயல் அதிகாரி பில் பெர்ஷ்ட் கூறுகையில், கடந்த ஆண்டில் இதுவரை கண்டிராத அளவுக்கு வாடிக்கையாளர் சேவைத் துறை அதிகாரிகள் இடமாற்றம் அதிகமாக இருப்பதாகவும், இது தொழில்துறையில் குறிப்பிடத்தக்கச் சீர்குலைவை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஹெச்எஃப்எஸ் ரிசர்ச் மற்றும் EY இன் அறிக்கை 65% நிறுவனங்கள் கிளவுட் சேவை திட்டங்களில் மூலோபாய முதலீடுகளைச் செய்துள்ளன, ஆனால் 32% மட்டுமே தங்கள் இலக்குகளை அடைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது.