தங்கம் தான் பெஸ்ட்.. முதலீட்டுச் சந்தையின் கலர் மாறுகிறது.. சீனாவில் துவங்கிய புது டிரெண்ட்..!!
சீனாவில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவாட்டம் மோசமாக உள்ளது, பங்குச் சந்தை நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது, வங்கி வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக இருப்பதால், தற்போது சீன மக்களின் முதலீட்டுப் பழக்கத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
சீன பொருளாதாரம் அதிகளவிலான தடுமாற்றத்துடன் இருந்தாலும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த நிலையில் சீன மக்கள் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய தயாராக இல்லை. இதனால் இளம் தலைமுறை முதலீட்டாளர்கள் முதல் வயதானவர்கள் வரையில் தங்கம் மீது தங்களுடைய முதலீட்டை திருப்பியுள்ளனர்.
இப்படி சீன இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஒரு முதலீட்டு வகை தான் இந்த கோல்டு பீன்ஸ். பட்டாணி போல இருக்கும் இந்த மணிகள் தங்கத்தால் செய்யப்பட்டு உள்ளது. இது 24 கேரட், 22 கேரட், 18 கேரட், 12 கேரட், 8 கேரட் என பல தரத்தில், பல விலையில் விற்கப்படுகிறது.
18 வயதான டினா ஹோங் தனது நிதி பாதுகாப்பைத் தங்கம் பீன்ஸ்-ல் (Gold Beans) தேடிக் கொண்டுள்ளார். ஒரு கிராம் எடையுள்ள இந்த தங்க பீன்ஸ், பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், இளம் சீனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.
இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், கண்ணாடி ஜாடிகளில் விற்கப்படும் இந்த தங்க பீன்ஸ் சீன நகைக்கடைகளில் தற்போது அதிகம் விற்பனையாகும் பொருட்களாக உள்ளன.
சீன நகைக்கடை நிறுவனமான லுக் ஃபூக் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் (Luk Fook Holdings International Ltd) செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தங்கம் பீன்ஸ் தற்போது சேமிப்புக்காக மட்டும் அல்லாமல் பரிசுகளுக்காகவும், முதலீடுகளுக்காகவும் வாங்குவது சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதிகரித்துள்ளது என்றார்.
2021 ஆம் ஆண்டில் உலக தங்கக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, தற்போது தங்கம் வாங்கும் நுகர்வோரில் 75% பேர் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்த ரிஸ்க் கொண்டது என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. டிசம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை பல முறை சாதனை உயர்வை எட்டியுள்ளது இதன் விற்பனைக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது. இந்த மாதம் தங்கக் கட்டிகளின் விலை ஒரு அவுன்ஸுக்கு $2,100 ஐ தாண்டியுள்ளது.
இதேவேளையில் தங்கம் பீன்ஸ் வாங்கும் நுகர்வோர், உண்மையான தங்கம் மற்றும் போலி தங்கம் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்திருக்காவிட்டால், அவர்கள் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.