கேமிங் துறையில் இறங்கும் லிங்க்டுஇன்.. அட இது புதுசா இருக்கே..!!
லிங்க்டுஇன் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஆன்லைன் விற்பனை தலைவரான அஷ்தோஷ் குப்தா இந்நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார், இவர் ஏப்ரல் மாத இறுதியில் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டு லிங்க்டுஇன் இந்தியாவின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டதில் இருந்து, அஷ்தோஷ் குப்தா இந்திய வர்த்தகம், வாடிக்கையாளர் வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தியுள்ளார். இவரது ராஜினாமா பெரும் அதிர்ச்சியை கொடுத்த அதேவேளையில் அடுத்த அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ப்ரொபெஷ்னல் நெட்வொர்க்கிங் தளமான லிங்க்டுஇன், தனது தளத்தில் கேமிங் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டெக் க்ரஞ்ச் செய்தி வெளியிட்டு உள்ளது.
படித்த மற்றும் பணி தொடர்பான பேச்சுகளும், மக்களும் இருக்கும் ஒரு பிரத்தியேக ப்ரொபெஷ்னல் நெட்வொர்க்கிங் தளமான லிங்க்டுஇன். இத்தகையை தளத்தில் கேமிங் அறிமுகம் என்பது மாறுபட்ட முயற்சி.
புதிர் விளையாட்டுகளின் மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில், லிங்க்டுஇன் பயனர் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்குடன் Puzzle தொடர்பான விளையாட்டுகளை இத்தளத்தில் அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் தளம் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
ஆப் ஆராய்ச்சியாளர் நிமா ஓஜி, லிங்க்டுஇன் நிறுவனம் தனித்துவமான ஒரு அம்சத்தைச் சோதனை செய்து வருவதாக சில கோட் சினிப்பிட்-களை கண்டறிந்துள்ளார். இப்புதிய சேவையில், விளையாட்டு வீரர்களின் ஸ்கோர்கள் அவர்களின் பணிபுரியும் இடங்களைக் கொண்டு ஒழுங்குபடுத்தப்படும், மேலும் இந்த ஸ்கோர்களை அடிப்படையாகக் கொண்டே நிறுவனங்கள் “தரவரிசைப்படுத்தப்படும்” என கூறியுள்ளார்.
டெக் க்ரஞ்ச் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் லிங்க்டுஇன் “குயின்ஸ்”, “இன்ஃபெரன்ஸ்”, “கிராஸ் கிளைம்ப்” எனும் மூன்று புதிர் விளையாட்டுகளை தற்போது உருவாக்கி வருகிறது. இது எப்போது துவங்கும், எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது தெரியவில்லை.