ஹர்திக் பாண்டியாவுக்கு வந்த சிக்கல்.. ரோஹித் நினைத்தால் சோலி முடிந்தது.. மும்பை இந்தியன்ஸ் ட்விஸ்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு சக வீரர்கள் ஒரு கேப்டனுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளிப்பார்களா? என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மீது இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்கள் கூட மரியாதை வைத்து இருந்தனர். அது போன்ற ஒரு மரியாதை ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைக்குமா? என்ற சந்தேகத்தை கிளப்ப முக்கிய காரணமே அணியில் நிலவும் அதிருப்தி தான்.

2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்ட கால கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஹர்திக் பாண்டியா துவக்கத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே இருந்தவர் என்றாலும் 2022 ஐபிஎல் தொடரின் போது அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்ந்தார். அங்கே அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா திடீரென அந்த அணியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தார். அத்துடன் கேப்டன் பதவியையும் பெற்றுக் கொண்டார்.

ஹர்திக் பாண்டியாவின் அந்த செயல் மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்த கேப்டனாக வர வாய்ப்பு உள்ள வீரர்களான பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ரோஹித் சர்மாவும் தன்னை நீக்கியது குறித்து அதிருப்தியுடனே இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களத்தில் செயல்படும் போது சக வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பார்களா? அப்போது களத்தில் இயல்பான சூழல் நிலவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியாவுடன் இயல்பாக பேசினால், பழகினால் மட்டுமே மற்ற வீரர்களும் ஹர்திக் பாண்டியாவை ஒரு கேப்டனாக ஏற்றுக் கொண்டு இயல்பான மரியாதை அளிப்பார்கள்.

மாறாக ரோஹித் சர்மா தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணி வீரர்களின் நம்பிக்கையை, மரியாதையை பெற பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *