தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக ஆர்.வி.உதயகுமார் பதவியேற்பு..!

2024-26-ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல், சென்னை வடபழனியில் கடந்த 16-ம் தேதி நடந்தது. தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர் என மொத்தம் 27 பதவிகள் கொண்ட இந்த சங்க தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த 1-ம் தேதி முடிந்தது.

ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கெனவே கூறி விட்டார். இதனால் ஏற்கெனவே செயலாளராக இருந்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தலைவர் பதவிக்கு வேட்புமனு செய்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு, பொருளாளர் பதவிக்கு இயக்குனர் சரண் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

துணைத் தலைவர் பதவிகளுக்கு அரவிந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இணை செயலாளர் பதவிகளுக்கு சுந்தர் சி., எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் மனு செய்தனர். இவர்களை தவிர மேற்கண்ட பதவிகளுக்கு யாரும் மனு தாக்கல் செய்யாததால் இவர்கள் 8 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இயக்குனர் பிரிவு செயற்குழு உறுப்பினர்களாக ராஜகுமாரன், ஆர் மாதேஷ், மனோஜ் குமார், மித்ரன் ஆர்.ஜவஹர், எஸ்.பிரபு, எம்.ராஜ்கபூர், ஆர்.கண்ணன், என்.எஸ்.ரமேஷ் கண்ணா, சி.ரங்கநாதன், சரவணன் சுப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவரும் நேற்று சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்கத்தில் பதவியேற்று கொண்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *