திடீர் திருப்பம்..! பொன்முடியை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு..!
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தது.
ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார். இதைத் தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக கடந்த 5-ம் தேதி சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கை செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், இருவருக்கும் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் பொன்முடியை குற்றவாளி என்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வதற்கான அனுமதியையும் உச்ச நீதிமன்றம் அளித்தது. இதற்கிடையில், திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, இதனை திருப்பிப் பெற்றுக்கொண்டது, சட்டப்பேரவை அலுவலகம். அதன்மூலம், பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் எனவும் தெரிந்தது.
மறுபுறம் அவர் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. அதையொட்டி, பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டார், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்ததால், பதவிப் பிரமாணம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.
இந்நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக தீர்ப்பு தந்திருக்கலாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.