டப்பிங் யூனியன் தலைவராக மீண்டும் தேர்வானார் நடிகர் ராதாரவி..!
சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் ராதாரவி, மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு 2024 முதல் 2026 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்காக போட்டியிட்டார்.
அதே தலைவர் பதவிக்கு ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 1,021 வாக்குகள் பதிவாகின. அதில் 662 வாக்குகள் பெற்ற ராதாரவி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராதாரவி வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணராஜ் 36 வாக்குகளும் பெற்றனர். தலைவர் பதவி மட்டுமல்லாமல் யூனியனின் 23 நிர்வாகிகளும் இந்தத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.