வளைகுடா நாடொன்றிற்கு கடத்தப்பட்ட பெண்கள்… WhatsApp குழுவால் தலைகீழான சம்பவம்
மத்திய கிழக்கு நாடான ஓமனில் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி வீட்டு வேலைக்கு சேர்ந்த பெண்கள் ஒரு WhatsApp குழுவால் மீட்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நரக துயரத்தில் இருந்து
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியை சேர்ந்த 54 பெண்களே நரக துயரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் தோராயமாக 2 மில்லியன் பெண்கள் அங்குள்ள குடியிருப்புகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
தொண்டு நிறுவனம் ஒன்று ஓமனில் மட்டும் 400 பெண்களிடம் முன்னெடுத்த ஆய்வில், பெரும்பாலான பெண்கள் ஆசை வார்த்தையை நம்பி வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்கு வந்து நரக துயரம் அனுபவிப்பதாகவே தெரியவந்துள்ளது.
மூன்றில் ஒருபங்கினர், கொடூரமாக உடல் ரீதியான துஸ்பிரயோகத்திற்கும் இலக்கானதையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையிலேயே மலாவியை சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தமது WhatsApp இலக்கத்தை ரகசியமாக ஓமனில் பகிரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
வியக்கும் வகையில் ஓமனில் வீட்டு வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்ட மலாவி பெண்கள் அந்த WhatsApp குழுவில் இணைந்துள்ளனர். மிக விரைவிலேயே அந்த WhatsApp குழுவில் தங்களின் இயலாமை மற்றும் வலியை அவர்கள் பகிரத்தொடங்கினர்.
பலரது கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, அவர்கள் வெளியேறாதபடி முடக்கப்பட்டிருந்தனர். விசாரணையில், தொடர்புடைய பெண்களுக்கு என செலவிட்ட பணத்தை அளித்தால் விடுவிக்கலாம் என்றும் முகவர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்கள் விடுவிக்கப்படுவார்கள்
ஓமனில் அமுலில் இருக்கும் சட்டத்தின் படி, வேலைக்கு அமர்த்திய நபர் விரும்பினால் மட்டுமே வீட்டு வேலைக்கு சேர்ந்த பெண்கள் விடுவிக்கப்படுவார்கள். குறித்த பெண் விரும்பிய வேலைக்கு செல்ல முடியாது என்பதுடன், நாட்டை விட்டும் வெளியேறவும் முடியாது.
வேலைக்கு அமர்த்தியவர்கள் கொடூரமாக நடந்துகொண்டாலும், அதில் ஒரு கட்டத்திற்கு மேல் தான் சட்டம் தலையிடும். இந்த நிலையில் தொடர்புடைய 54 பெண்களை மீட்க மலாவி அரசாங்கம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதுடன், 160,000 அமெரிக்க டொலர் தொகையை செலவிட்டு, தொடர்புடைய பெண்களை ஓமனில் இருந்து மீட்டுள்ளது.
இதில் 23 வயதான பெண் மட்டும் சடலமாக மலாவிக்கு கொண்டுவரப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு ஓமனில் பிரேதப் பரிசோதனையோ விசாரணையோ முன்னெடுக்கப்படவில்லை.
இந்த 54 பெண்களும், அவர்களை வேலைக்கு அமர்த்திய நபருக்கு 1000 முதல் 2,000 டொலர் வரையில் செலுத்தியே கடவுச்சீட்டை திரும்ப பெற்றுள்ளனர்.