PM Modi | Jagtial |ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் வடிவம்! அதை அழிப்பதா? ராகுலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி!
மக்களவைத் தேர்தலையொட்டி தென் மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான ஜக்தியாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, காங்கிரஸின் நியாய யாத்திரையில் ராகுல் காந்தி ‘சக்தி’ குறித்த பேச்சுக்கு, பிரதமர் மோடி பதில் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். உலகில் பிறந்த அனைவருமே சக்தியால் படைக்கப்பட்டவர்கள், அவ்வாறு இருக்கையில் சக்தியை அழிக்க வேண்டும் என்று ஒருவரால் எப்படி பேச முடியும் என்றார்.
மேலும், ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் ஒரு வடிவம், உன்னை உட்பட அனைவரையும் நான் சக்தியின் வடிவமாக வணங்குகிறேன்” என்று கூறினார்.
இந்த உலகில் உள்ள ஒருவரால் எப்படி சக்தியை அழிக்க முடியும் என்று பேச முடியும்! எல்லோரும் சக்தியை வணங்குகிறார்கள். சந்திரயானின் மகத்தான வெற்றியை சிவசக்திக்கு அர்ப்பணித்தோம் என்றும் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 MP தொகுதிகளில் 4-ஐ கைப்பற்றிய பாஜக இம்முறை அதிக இடங்களை கைபற்ற முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள மல்காஜ்கிரி தொகுதியில் ரோட் ஷோ நடத்தி அசத்திய பிரதமர் மோடி, நாகர்கரனூலில் நடந்த பொதுக்கூட்டத்திலும் உணர்ச்சி பொங்க பேசினார்.
தொடர்ச்சியாக தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். முன்னதாக இன்று மாலை தமிழகத்தின் கோயம்புத்தூரில் ரோடு ஷோ நடத்துகிறார். நாளை சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.