IPL 2024: சிஎஸ்கே வீரருக்கு காயம் – இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்ற மெடிக்கல் டீம்!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் விளையாடிய 31 போட்டிகளில் சிஎஸ்கே 20 போட்டிகளிலும், ஆர்சிபி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் அர்சிபி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு ஒரு போட்டியில் கூட ஆர்சிபி வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற வீரர்கள் ஒவ்வொருவரும் காயம் காரணமாக வெளியேறி வருகின்றனர். ஏற்கனவே நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே கை விரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். மேலும் முதல் வீரராக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டார்.
இதே போன்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ் பதிரனாவும் வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர், முழுமையாக குணமடைய இன்னும் 4 வாரங்கள் ஆகும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியிருக்கிறது
இந்த நிலையில் தான் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச வீரரும், சிஎஸ்கே அணியில் இடம் பெற்றவருமான முஷ்தாபிகுர் ரஹ்மான் காயம் அடைந்துள்ளார். அவரால் நடக்க கூட முடியாத நிலையில் கால்களில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். எனினும், காயம் அடைந்த நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இடம் பெறுவது குறித்து இதுவரையில் தகவல் இல்லை. சிஎஸ்கே அணியில் முஷ்தாபிகுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.