ரூ.9000 கோடி TCS பங்குகளை விற்கும் டாடா சன்ஸ் திட்டம்..!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் சாப்ட்வேற் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பங்குகளை அதன் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா குழுமத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகம் லாபம் கொடுத்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் விளங்குகிறது. இந்த நிலையில் டாடா குடும்பத்தின் தரப்பில் நீண்ட காலத்திற்குப் பின்பு டிசிஎஸ் பங்குகள் விற்கப்படுகிறது. இதுநாள் வரையில் பைபேக் மட்டுமே செய்து வந்த நிலையில், பங்கு விற்பனை அறிவிப்பு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒரு பங்கை ரூ.4,001 என்ற பேஸ் விலையில் 2.34 கோடி பங்குகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. மொத்த விற்பனை மதிப்பு சுமார் ரூ.9,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேஸ் விலை, திங்கட்கிழமை வர்த்தக முடிவின் விலையைக் காட்டிலும் 3.6% குறைவானதாகும், டாடா சன்ஸ் இந்த பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்பனை செய்ய உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 72.38% பங்குகளை டாடா சன்ஸ் வைத்திருக்கிறது, கடந்த ஒரு வருடத்தில் டிசிஎஸ் பங்குகள் சுமார் 30% உயர்ந்துள்ளன. திங்கட்கிழமை வர்த்தக நாளில் டிசிஎஸ் புதிய உச்ச விலையான ரூ.4,254.45 ஐ தொட்ட பின்னர், டிசிஎஸ் பங்குகள் 1.7% சரிந்து ரூ.4,144.75 என்ற விலையில் மும்பை பங்குச்சந்தையில் முடிந்தன.
ரூ.15 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கொண்ட டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) க்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் டாடா குழுமத்தின் அனைத்து வர்த்தகமும் வருகிறது, இந்த நிறுவனம் இதுநாள் வரையில் ஒரு தனியார் முதலீட்டு மற்றும் நிர்வாகமாக இயங்கி வந்தது. ஆனால் ஆர்பிஐ விதிமுறை காரணமாக டாடா சன்ஸ் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைப் படி, இந்தியாவில் செயல்படும் அனைத்து NBFC நிறுவனத்தின் அப்பர் லேயர் நிறுவனம் பங்குச்சந்தையில் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டாயம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது.
இந்த நிலையில் டாடா கேப்பிடல் நிறுவனத்தின் அப்பர் லேயர் NBFC ஆக டாடா சன்ஸ் நிறுவனத்தை ஆர்பிஐ கடந்த ஆண்டு அடையாளம் கண்டது, இதன் படி செப்டம்பர் 2025-க்குள் என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட வேண்டும்.
டாடா சன்ஸ் லிமிடெட் சுமார் ரூ.11 லட்சம் கோடி மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதன் ஐபிஓ அளவு சுமார் ரூ.55,000 கோடி இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. டாடா சன்ஸ் நிறுவனம் தனது பங்குகளைச் சுமார் 80% பங்குகளைத் தனது சொந்த கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும், எஞ்சியுள்ள 20 சதவீத பங்குகளை மட்டுமே பணமாக்கும்.
ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளின்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதைத் தவிர்க்க டாடா சன்ஸ் தனது கடன் அமைப்பை மறுசீரமைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது டிசிஎஸ் பங்கு விற்பனை குறித்த அறிவிப்பு வந்துள்ளது.