Work From Home வேணுமா ப்ரோமோஷன் கட்.. பிரபல டெக் நிறுவனத்தில் புதிய பாலிசி.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!!
டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் கொவிட்-19 தொற்றுநோய் பரவல் துவங்குவதற்கு முன்பே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஹைப்ரிட் பணி கலாச்சாரம் இருந்தது. ஆயினும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிற நிறுவனங்களைப் போல் அனைத்து ஊழியர்களுக்கும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற முக்கியமான உத்தரவை விடுத்தது.
இந்த நிலையில் டெல் நிறுவனம் தற்போது வீட்டிலிருந்து பணிபுரிவதைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்குத் தண்டிக்கும் வகையில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.
இப்புதிய கொள்கையின்படி, மே மாதம் முதல் அனைத்து ஊழியர்களும் அவர்களுடைய அலுவலகம் வரும் விருப்பம் மற்றும் அவர்களுடைய வருகை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு “hybrid” அல்லது “Remote” என வகைப்படுத்தப்படுவார்கள் என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஹைப்ரிட் ஊழியர்கள் ஒரு காலாண்டில் குறைந்தபட்சம் 39 நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்கு சுமார் மூன்று நாட்கள் அங்கீகரிக்கப்பட்ட பணியிடத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும்.
வீட்டிலிருந்தே தொடர்ந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் எவ்விதமான ப்ரோமோஷன் அளிக்கப்படாது அல்லது பணி மாற்றத்திற்கு அனுமதி வழங்கப்படாது என இப்புதிய கொள்கை மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த புதிய முறை சிலருக்கு அதாவது 40 வயதை தாண்டிய அனைத்து ஊழியர்களுக்கும் மிகவும் சாதகமாக இருக்கும், காரணம் அவர்கள் ஏற்கனவே உயர் பதவியில் இருப்பார்கள் போதுமான சம்பளம் கிடைத்துவிடும். இந்த நிலையில் வீட்டில் இருந்து பணியாற்றுவதன் மூலம் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் பிரச்சனையில்லை.
இந்த மனநிலை ஒவ்வொருவருக்கும் மாறும் என்றாலும், பெரும்பாலான அமெரிக்க ஊழியர்கள் வொர்க் லைப் பேலென்ஸ்-க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்களுக்கு இந்த சலுகை ஜாக்பாட் ஆக இருக்கும்.
இதேவேளையில் பல இளம் தலைமுறையினர் வீட்டில் இருந்துகொண்டு மூன்லைட்டிங் செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. டெல் நிறுவனத்தில் நிலையான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து 2-3 இடத்தில் சர்வசாதாரணமாக பணியாற்ற முடியும், இதன் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
இதேவேளையில் கடந்த ஆண்டு டெல் நிர்வாகம் சுமார் 6650 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது, இப்படி பணிநீக்கம் செய்தால் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களை அதிகம் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது.