பாரிவேந்தர் விளாசல் : எனக்கு வந்த கூட்டத்தைவிட மோடிக்கு கூட்டம் குறைவே..!
ஐஜேகே நிறுவன தலைவரும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் (எ) பச்சமுத்து பேசியதாவது:
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் அவர் கூடவே நானும் இருப்பேன். அங்கும் கூட்டம் வந்தது. சொல்லப்போனால் நாம் நடத்திய மாநாட்டை விட குறைவான கூட்டம் தான் மோடிக்கே வந்தது. பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட பலரிடம் கெஞ்சி பார்த்தேன். கட்சியில் யாரும் சம்மதிக்கவில்லை. இந்த சமுதாயத்தில் எம்பி தேர்தலுக்கு போட்டியிட ஆளே இல்லையா என யாரும் கூறிவிடக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகிறேன். இந்த முறை போட்டியிடாவிட்டால் மக்கள் மறந்து போய் விடுவார்கள். மறுபடியும் கட்சியை ஆரம்பத்தில் இருந்து வளர்க்க வேண்டி இருக்கும்.
இன்றைக்கு பல்வேறு கட்சிகள் தோழமைக்கட்சிகளிடம் எங்களுக்கு 10 சீட்டு கொடுங்கள், ஒரு சீட்டு கூடுதலாக போட்டு கொடுங்கள் என பேரம் பேசிக்கொண்டும், கெஞ்சிக்கேட்டு கொண்டும் இருக்கின்றனர். நம்ம கட்சி மட்டும் தான் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். தமிழகத்திலிருந்து தாமரை சின்னத்தில் வென்று போனால் மட்டுமே நமக்கு மரியாதை இருக்கும். அதனால் தான் நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சியில் பாரிவேந்தர் நடத்திய மாநாட்டில் முன்வரிசைகளை தவிர மற்ற எல்லா சேர்களும் காலியாக இருந்தன. இந்த கூட்டத்தில் பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இவ்வளவு பெரிய கூட்டம் எங்கேயும் வந்ததில்லை என்று பேசினார். ஆனால் அவர் காலி சேர்களுடன் பேசும் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலானது. நிலைமை இப்படி இருக்க இந்த கூட்டத்தை விடவே மோடிக்கு கூட்டம் குறைவே என பரிவேந்தர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.