இன்று சேலம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அதை தொடர்ந்து கோவையில் இரவு தங்கி பிரதமர் மோடி ஓய்வெடுத்தார்.
அதை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11.40 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான பிரச்சாரக்கூட்டம் சேலத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் மோடி பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் மேடை அமைக்கப்பட்டுள்ள சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகிறார்.
இதற்காக அங்கு 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது மக்களையும் சந்திக்கிறார்.
இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.
சேலத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்தவும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்கூட்ட மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். சேலம் பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைதலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., அருண், டி.ஐ.ஜி.க்கள், 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 18 கூடுதல் சூப்பிரண்டுகள், 32 துணை சூப்பிரண்டுகள், 60 இன்ஸ்பெக்டர்கள், 208 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 ஆயிரத்து 700 போலீசார் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையினரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் மைதானம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பொதுக்கூட்ட மைதானம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.
பிரதமர் சேலம் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி டிரோன்கள் மற்றும் ஆள் இல்லாத விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.