நீங்கள் 85 வயதுக்கு மேற்பட்டவரா..? வீட்டிலிருந்து வாக்களிக்கும் முறை இதோ..!
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தே தபால் வாக்களிக்கும் முறை மூலம் வாக்கு பதிவு செய்யப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். தபால் வாக்கு அளிக்கும் முறையில் வாக்குப்பதிவு செய்வதற்கு 12d படிவம் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதில் அவர்கள் விருப்பம் தெரிவித்தால் வீட்டுக்கு சென்று வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும்.
இதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தலுக்கு முன்பாக வீட்டில் இருந்து வாக்களிக்கும் நாளை நிர்ணயம் செய்வார். வாக்காளர் தங்கள் விரும்பும் வேட்பாளரை தபால் ஓட்டு மூலம் தேர்வு செய்ய வேண்டும். இதன் பின்னர் தபால் ஓட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்றுக் கொள்வார். இதற்காக தேர்தல் அதிகாரிகள், வீடியோ பதிவு செய்யும் நபர் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழு வாக்குப்பெட்டி மற்றும் தனி உரிமைக்கான வசதியுடன் வாக்காளர் வீட்டுக்கு செல்வார்கள். அங்கு வாக்குப்பதிவு வீடியோ மூலம் ரெக்கார்ட் செய்யப்படும். பின்னர் இவர்களின் வாக்குகள் தபால் வாக்குமூலம் வாக்கு எண்ணிக்கை நாளன்று கணக்கிடப்படும்.