தொப்பை கரைய… பருமன் குறைய… சுவையான சில பாசி பருப்பு ரெஸிபிகள்!
உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில், பருப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் பருமனை பெருமளவு குறைக்கலாம். பயத்தம் பருப்பு என்றும் அழைக்கப்படும் பாசிப்பருப்பு, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகிறது. இதில் புரதச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. இந்நிலையில் பாசிப்பருப்பை, சுவையான வகையில் உண்ண, சில அசத்தலான சமையல் குறிப்புகள் அல்லது ரெசிபிகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பாசிப்பருப்பு தோசை
பாசிப்பருப்பு தோசை, காலை கால் மற்றும் இரவு உணவுக்கான சிறந்த தீர்வாக இருக்கும். புரதச்சத்து நிறைந்த இதை காலையில் உண்பதால், வயிறு நிறைந்திருக்கும். பசியை கட்டுப்படுத்தும். துண்டங்களாக வெட்டிய வெங்காயம் குடைமிளகாய், கேரட், பச்சை மிளகாய் இஞ்சி, ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் தோசை, ஒரு முழுமையான உணவு. எடை இழக்க (Weight Loss Tips) விரும்பபவர்கள் கண்டிப்பாக இதனை சேர்த்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பிற்கு பதிலாக, முளைகட்டிய பயறையும் சேர்த்துக் கொள்ளலாம். முளை கட்டுவதால் ஊட்டச்சத்து இரு மடங்கு ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாசிப்பருப்பு பொங்கல்
பாசிப்பருப்பு பொங்கல் செய்வதும் எளிது. மிகவும் சுவையானது. நெய் சேர்த்து செய்யப்படும் பொங்கல், மூட்டு வலி போன்றவற்றிற்கும் தீர்வாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் மிளகு மற்றும் இஞ்சி, வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, உடல் பருமன் குறைய பெரிதும் உதவுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தாராளமாக சாப்பிடும் உணவு இது என்றால் மிகை இல்லை.
பாசிப்பருப்பு இட்லி
பாசிப்பருப்பு இட்லி, வழக்கமாக செய்யும் இட்லியை விட ஊட்டச்சத்து மிக்கது. உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யப்படும் பாசிப்பருப்பு இட்லி, புரதச்சத்தை அள்ளிக் கொடுக்கும். இதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்யப்பட்ட சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால், இதைவிட சிறப்பான காலை உணவு எதுவும் இருக்க முடியாது. இரவு உணவிற்கும் இதனை தாராளமாக உண்ணலாம்.
பாசிப்பருப்பு சூப்
பாசிப்பருப்பு சூப் தயாரிப்பதற்கும் எளிது. சுவை மிக்கதும் கூட. புதிதாக நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்த பாசிப்பருப்பை வேகவைத்து, நன்றாக மசித்து மிளகுப்பொடி உப்பு சேர்த்தால் சுவையான பாசிப்பருப்பு சூப் ரெடி. இதனுடன் காய்கறிகளின் சாலட் இருந்தால் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும்.
முளைகட்டிய பயிறு
முளைகட்டிய பயிறு புரதச்சத்து நிறைந்த அற்புதமான உணவு. இதனால் ஊட்டச்சத்து இரட்டிப்பாகிறது என்பதால் இதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளும் இரட்டிப்பாக இருக்கும். முளைகட்டிய பயிரை அப்படியே சாப்பிடுவதை விட, சிறிது வேக வைத்து சாப்பிடுவது சிறந்தது என்கின்றனர் உணவு நிபுணர்கள். ஏனெனில் வேக வைப்பதால் செரிமானம் எளிதாகும். முளைகட்டிய பயிறு உடன், சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, கேரட் போன்ற காய்கறிகள் சேர்த்து, எலுமிச்சை சாறு உப்பு கலந்த சாப்பிடுவது சிறந்த காலை உணவாக இருக்கும். சுவையான மற்றும் புரதச்சத்து நிறைந்த காலை உணவுவிற்கான சிறந்த தேர்வு இது.