அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில், IT சேவை நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளது. மேகா இன்ஜினியரிங், பியூச்சர் கேமிங் போன்று ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடை கொடுக்காவிட்டாலும், 3 ஐடி சேவை நிறுவனங்களின் நன்கொடை பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
பிஜேபி அரசு அறிமுகம் செய்த தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய ஐடி நிறுவனங்கள் பட்டியலில் 3 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. இவை இன்போசிஸ், சைஎண்ட் லிமிடெட், ஜென்சார் டெக்னாலஜிஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த தகவல், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Cyient Ltd: தேர்தல் ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியுதவி செய்த மூன்று ஐடி நிறுவனங்களில் சைஎண்ட் நிறுவனம் (Cyient) அதிக அளவில் நிதி வழங்கியுள்ளது. தற்போது செயல்பாட்டில் இல்லாத தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் அளவிலான நிதியை வழங்கியுள்ளது சைஎண்ட் நிறுவனம். எனினும், இந்த நிதி எந்த அரசியல் கட்சிகளுக்கு சென்றது என்பது இதுவரை தெரியவில்லை.
Infosys Ltd: நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவ கவுடா அவர்களின் ஜனதா தள கட்சிக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1 கோடி நிதியுதவி செய்துள்ளது.
Zensar Technologies: இதேபோல், ஜென்சார் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு மே மாதம், அடையாளம் காணப்படாத அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.3 கோடி நிதியுதவி செய்துள்ளது.
தேர்தல் பத்திர திட்டம், அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படையான நிதி வழங்குவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டாலும், இந்த திட்டத்தின் மூலம் நிதி வழங்கிய கட்சிகளின் விவரங்கள் வெளியாகாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் காரணமாகவே இந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு கிடைத்தது?: ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2018 இல் தேர்தல் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பாஜக அதிகப்படியான நன்கொடையை பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பிஜேபி சுமார் ரூ.6,986.5 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் (ரூ.1,397 கோடி), காங்கிரஸ் (ரூ.1,334 கோடி) மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி (ரூ. 1,322 கோடி) நிதியைத் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளது.
லாட்டரி மன்னன் சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் தான் தேர்தல் பத்திரங்களை அதிகம் வாங்கியுள்ளது. பியூச்சர் கேமிங் நிறுவனம் மட்டும் ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது, அதில் 37 சதவீதம் திமுகவுக்கு சென்றது. பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், இப்போது கைவிடப்பட்ட தேர்தல் நிதித் திட்டத்தின் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை அளித்துள்ளது.