தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் குறித்து தகவல்களை சமர்பித்த நிலையில், ECI பொது வெளியில் ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2024 வரை ரூ.358.91 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை 333 தனிநபர்கள் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒருபக்கம் நிறுவனங்கள் பெயரில் நன்கொடை கொடுக்கப்பட்ட தரவுகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் வேளையில் தற்போது 333 தனிநபர்கள் கொடுத்துள்ள நன்கொடைகள் மீண்டும் அதிரடியைக் கிளப்பியுள்ளது.
இந்த தனிநபர்களில், பெரும்பாலானோர் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலும், நிறுவனத்தின் தலைவராக இருப்பவர்களும் தான். இந்த நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய டாப் 15 பேரின் பட்டியல் இதுதான்.
இந்த 15 பேர் மட்டுமே சுமார் ரூ.158.65 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். இது மொத்த தனிநபர் நன்கொடை தொகையில் 44.2% பங்கீடாகும். இந்திய அரசியல் கட்சிகளுக்கு அதிகம் நன்கொடை கொடுத்த டாப் 15 தனிநபர்கள் யார்..?
1. லட்சுமி நிவாஸ் மிட்டல் (ஆர்செலர் மிட்டல்): ₹35 கோடி
2. லக்ஷ்மிதாஸ் வல்லபதாஸ் மெர்சன்ஸ் (ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ்): ₹25 கோடி
3. ராகுல் பாட்டியா (இண்டிகோ): ₹20 கோடி
4. இந்தர் தாகுர்தாஸ் ஜெய்சிங்கனி (பாலிகேப் குழும நிறுவனங்கள்): ₹14 கோடி
5. ராஜேஷ் மன்னாலால் அகர்வால் (அஜந்தா பார்மா லிமிடெட்): ₹13 கோடி
6. ஹர்மேஷ் ராகுல் ஜோஷி & ராகுல் ஜகன்னாத் ஜோஷி (ஓம் சரக்கு குழும நிறுவனங்கள்): தலா ₹10 கோடி
7. கிரண் மஜும்தார் ஷா (பயோகான்): ₹6 கோடி
8. இந்திராணி பட்நாயக்: ₹5 கோடி
9. சுதாகர் கன்சர்லா (யோடா குழுமம்): ₹5 கோடி
10. அபிராஜித் மித்ரா (Searock Infraproject Private Limited): ₹4.25 கோடி
11. சரோஜித் குமார் டே (ஜேடி அக்ரோ டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட்): ₹3.4 கோடி
12. திலீப் ராமன்லால் தாக்கர் (சமுத்ரா ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட்; ஜேட் மினரல்ஸ் & மைன்ஸ் பிரைவேட் லிமிடெட்): ₹3 கோடி
13. பிரகாஷ் பல்வந்த் மெங்கனே (ஸ்ரீநாத் ஸ்தபத்யா இந்தியா பிரைவேட் லிமிடெட்): ₹3 கோடி
14. நிர்மல் குமார் பத்வால் (பெங்குயின் டிரேடிங் & ஏஜென்சீஸ் லிமிடெட்): ₹2 கோடி
தேர்தல் பத்திர திட்டம், அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படையான நிதி வழங்குவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டாலும், இந்த திட்டத்தின் மூலம் நிதி வழங்கிய கட்சிகளின் விவரங்கள் வெளியாகாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் காரணமாகவே இந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
2018 இல் தேர்தல் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பாஜக அதிகப்படியான நன்கொடையைப் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பிஜேபி சுமார் ரூ.6,986.5 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் (ரூ.1,397 கோடி), காங்கிரஸ் (ரூ.1,334 கோடி) மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி (ரூ. 1,322 கோடி) நிதியைத் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளது.
லாட்டரி மன்னன் சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் தான் தேர்தல் பத்திரங்களை அதிகம் வாங்கியுள்ளது. பியூச்சர் கேமிங் நிறுவனம் மட்டும் ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது மூலம் அதிக நன்கொடை கொடுத்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.