குடிநீர் தட்டுப்பாடு: பெங்களூரை விட்டு சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுகளை கட்டும் மக்கள்
கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க முடியாமல் கார்ப்பொரேஷன் நிர்வாகம் திணறுகிறது.
இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் தங்களுக்கு வொர்க் பிரம் ஹோம் வசதி தரவேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர் மக்களின் மோசமான நிலையை இந்த செய்தி வெளிக்கொண்டு வந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த பவானி மணி முத்துவேல் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சமைக்க, சுத்தம் செய்ய, வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்த இந்த வாரம் வெறும் 100 லிட்டர் குடிநீர் தான் கிடைத்துள்ளது.
குளிப்பதற்கும் கழிவறைக்கும், துணை துவைப்பதற்கும் இதனால் மிகவும் சிரமமாக இருப்பதாக பவானி மணி கூறியுள்ளார்.
அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இவர் கூறுகையில், நாங்கள் பொதுவாக நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கிறோம், ஆனால் அது வறண்டு கொண்டிருக்கிறது. 40 வருடங்களில் தான் அனுபவித்த மிக மோசமான தண்ணீர் நெருக்கடி இது என்று அவர் கூறினார்.
பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட் சுற்றுப்புறத்தில் உள்ள பல உலகளாவிய சாப்ட்வேர் நிறுவனங்களின் ஆடம்பரமான தலைமையகத்தின் அருகே உள்ள ஆடம்பரமற்ற குடியிருப்பு பகுதிதான் அம்பேத்கர் நகர்.
பெங்களூரு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வழக்கத்துக்கு மாறான வெப்பத்தைக் காண்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் குறைந்தளவு மழை பெய்துள்ளது. பல பகுதிகளில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக குடிதண்ணீருக்கான செலவுகள் அதிகரித்துள்ளது. விரைவாக விநியோகம் குறைந்து வருகிறது.
நகர மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தண்ணீர் டேங்கர்களை கொண்டு விநியோகம் செய்கின்றனர். அதேநேரத்தில் தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் போன்ற அவசர நடவடிக்கைகளுடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
ஆனால் கோடை வெயில் மிகவும் வலுவாக இருக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இன்னும் மோசமான நிலை வரும் என்று தண்ணீர் நிபுணர்கள் மற்றும் பல குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.
நெடுங்காலமாக இந்த நெருக்கடி இருந்து வந்துள்ளது என்று நீர், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் வாழ்வாதார ஆய்வகங்களின் சிந்தனைக் குழுவின் பெங்களூரைச் சேர்ந்த நீர்வியலாளர் ஷஷாங்க் பலூர் கூறினார்.
இந்த கடினமான சூழ்நிலை தொடர்ந்தால் பெங்களூரைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமை உருவாகிவிடும் என சோகத்துடன் பலூர் கூறுகிறார்.