IPL 2024 : இனி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இல்லை.. ஆர்சிபி பெயர், ஜெர்ஸி அதிரடி மாற்றம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பெயர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்பு இதற்கான முன்னோட்டத்தை வெளியிட்டு பெயர் மாற்றத்தை சூசகமாக கூறி இருந்தது ஆர்சிபி அணி. அதன் படி தற்போது பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயர் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” என மாற்றப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது. அப்போதிருந்தே ஐபிஎல் அணியின் பெயரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த அணி நிர்வாகம் தற்போது பெயரை மாற்றி இருக்கிறது.

2008 முதல் 2023 வரை 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஒரு கோப்பை கூட வெல்லாத அணியாக உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அதன் காரணமாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், சில நாட்கள் முன்பு தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி மகளிர் ஐபிஎல் கோப்பையை வென்றது.

இந்த பெயர் மாற்ற நிகழ்வில் மகளிர் ஐபிஎல் வென்ற அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாஃப் டு பிலேசிஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் அணியின் பெயர் மாற்றம் மற்றும் புதிய ஜெர்ஸியை வெளியிட்டனர்.

இதுவரை சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த ஜெர்ஸியை அணிந்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இனி கீழே சிவப்பும், மேலே நீல நிறமுமாக உள்ள ஜெர்ஸியை அணிய உள்ளனர். இந்த நிகழ்வில் விராட் கோலி பேசும் போது தான் எந்த காலத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட்டு விலக மாட்டேன் எனக் கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்த பெயர் மாற்றத்துக்கு பின் முதன் முறையாக 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த பெயர் மாற்றம் அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பை பெற்றுத் தருமா? என்பதே பொதுவான கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *