இனிமேலும் பொறுக்க முடியாது.. ரிஷப் பண்ட் இடத்தை காலி செய்த 2 வீரர்கள்.. இனி என்ன நடக்கும்?
இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ரிஷப் பண்ட் இடத்தை பிடிக்க இரண்டு வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இனி ரிஷப் பண்ட் இந்திய டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் தனது இடத்தைப் பெற வேண்டும் என்றால் இந்த இரண்டு வீரர்களுடன் போட்டி போட்டுத் தான் பெற வேண்டும்.
ரிஷப் பண்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி, அந்த காயங்களில் இருந்து மீண்டும் கிரிக்கெட் ஆட தேவையான உடற்தகுதியைப் பெற பல மாதங்கள் எடுத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பின் 2024 ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க இருக்கிறார்.
கடந்த சில மாதங்கள் முன்பு வரை விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் இடத்தை நிரப்ப சரியான வீரர் இல்லாமல் இந்திய டெஸ்ட் அணியும், இந்திய டி20 அணியும் தவித்து வந்தது. இந்த நிலையில் தான் டி20 அணியில் ஜிதேஷ் சர்மா வாய்ப்பு பெற்றார். ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் பெயர் பெற்ற அவர் இந்திய அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ஒவ்வொரு போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதை அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஜிதேஷ் சர்மாவுக்கு தான் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதே போல, டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பின் இடம் பெற்ற கே எஸ் பாரத், இஷான் கிஷன் போன்றோர் விக்கெட் கீப்பிங் அல்லது பேட்டிங்கில் கோட்டை விட்டனர். இதை அடுத்து துருவ் ஜுரேல் வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டியின் வெற்றிக்கு அவரே முக்கிய காரணமாக இருந்தார்.
இதை அடுத்து துருவ் ஜுரேல் டெஸ்ட் அணியிலும், ஜிதேஷ் சர்மா டி20 அணியிலும் நிரந்தர இடத்தை நோக்கி நகரத் துவங்கி உள்ளனர். டி20 அணியில் துருவ் ஜுரேலை சேர்க்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் பங்கேற்றாலும் அதில் தனது பழைய பேட்டிங் ஃபார்மை நிரூபிக்க வேண்டும். மேலும், விக்கெட் கீப்பிங்கில் அவரால் சரியாக செயல்பட முடியுமா? என்பதையும் தேர்வுக் குழு உற்று நோக்கும் என்பதால் அவர் இன்னும் பல கட்டங்களை தாண்டிய பின்னரே இந்திய அணியில் வாய்ப்பு பெற முடியும். அவரது இந்திய அணி வாய்ப்பு சற்று சிக்கலான நிலையில் தான் உள்ளது.