ஏன் தெரியுமா ? ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் இருக்க வேண்டிய மூலிகை கற்பூரவள்ளி..!
கற்பூரவள்ளியின் இனிமையான சுகந்தம் மனதுக்கு மகிழ்ச்சியை வழங்குவது மட்டுமன்றி, பல நோய்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் சக்தி படைத்தது. அதாவது, தன் வாசனைக்கு காரணமான ஆவியாகக்கூடிய எண்ணெயின் மூலம் நோய்களை எதிர்த்துப் போராடும் `மூலிகைப் போராளி’ கற்பூரவள்ளி. ஆண்களுக்கான மூலிகை… பெண்களுக்கான மூலிகை… வயதானவர்களுக்கான மூலிகை என சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள் உண்டு. அவ்வகையில் குழந்தைகளுக்கான பிரத்யேக மூலிகை என கற்பூரவள்ளியை சொல்ல முடியும்!
உடலுக்கு நறுமணமூட்ட வேதியியல் கலவை நிறைந்த செயற்கை பெர்ஃப்யூம்கள் (Perfume) இக்காலத்தில் பயன்படுவதைப் போல, அக்காலத்தில் எவ்வித செயற்கை தாக்குமுமின்றி இயற்கையான நறுமணத்தைப் பெற, கற்பூரவள்ளி உதவியிருக்கிறது. உடல், தலைமுடி மற்றும் ஆடைகளுக்கு வாசனையூட்டும் நறுமணப் பொருளாக கற்பூரவள்ளி பயன்பட்டிருக்கிறது. ஒரு சிறிய தொட்டியில் கற்பூரவள்ளியை நட்டு வைத்தால் போதும்! வாசனையுள்ள இலைகள் துளிர்த்துக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் இருக்க வேண்டிய மூலிகை கற்பூரவள்ளி. வாசனைமிக்க இலைகளை உடையதால், `கற்பூர’வள்ளி எனும் பெயர் இதற்கு. பொதுவாக மணமுள்ள பொருள்களுக்கு `கற்பூர’ எனும் முன்மொழி சேர்க்கப்படுவது வழக்கம். மழை மற்றும் குளிர்காலங்களில் சமையல் அறைகளில் கோழையகற்றி செய்கையுடைய கற்பூரவள்ளியின் மணம் இருந்தால், நுரையீரல் பாதை தொடர்பான நோய்களுக்கு அஞ்ச வேண்டியிருக்காது.
கற்பூரவள்ளியை வைத்து சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியும். எப்படி? கற்பூரவள்ளி இலைகளில் இருந்து சாறெடுத்து, சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று உபாதைகள் மற்றும் சளித் தொந்தரவுகள் குறையும் என்பது அக்கால மருத்துவ மூதாட்டிகளின் வேதவாக்கு.
உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, கற்பூரவள்ளி இலை சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் மென்மையாகத் தடவி விடுங்கள். விரைவில் அவை மறைந்துவிடும். வயிறு உப்பி மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம்.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் பெருகவும் இதன் இலைகளை உணவு முறையில் பயன்படுத்தும் வழக்கம் கிராமங்களில் உண்டு. `கற்பூரவள்ளியின் கழறிலை… நற்பாலர் நோயெல்லாம் நாசமாயகலுமே…’ எனும் தேரையர் காப்பியம் பாடல், குழந்தைகளுக்கான மூலிகை இது என்பதை எடுத்துரைக்கிறது.
தண்ணீருக்கு சுவை இருக்கிறதா? அதற்கு சுவை கொடுக்க முடியுமா? கற்பூரவள்ளி போன்ற மூலிகைகள் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் நிச்சயம் முடியும். சுவையைக் கொடுத்து நோய்களையும் போக்கும் மருத்துவ நீராகத் தண்ணீரை மாற்றும் வல்லமை மூலிகைகளுக்கு உண்டு. மழைக்காலங்களில் குடிக்கும் தண்ணீரில் 3, 4 கற்பூரவள்ளி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து மூலிகை நீராகப் பயன்படுத்தலாம். லேசான கார்ப்பு சுவையுடன், இருமலைக் கட்டுப்படுத்தும்.
இருமல் உண்டாகும்போது, சிறிதளவு இலையை நன்றாகக் கழுவிட்டு மென்று சாப்பிட, இருமல் குறையும். இதன் `வாலடைல்’ எண்ணெயில் உள்ள ’p-cymene’ மற்றும் ’thymol’ நோய்க்கிருமிகளை அழிப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன. இதில் இருக்கும் வேதிப்பொருள்கள் நுரையீரல் பாதையை விரிவடையச் (Broncho-dilator) செய்து, சுவாசம் முறையாக நடைபெற வழிவகுக்கும். ஆவி (வேது) பிடிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் கற்பூரவள்ளி முக்கியமானது.
தொண்டையில் கரகரப்பா… இதன் இலையை மென்று சுவைக்க, கரகர தொண்டைக்கு இதம் கிடைக்கும்! இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சத்திற்கு, காயங்களை விரைவாகக் குணமாக்கும் தன்மை இருக்கிறது. இதிலுள்ள தைமாலுக்கு, பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் வன்மை இருப்பதால், பல்வேறு பற்பசைகளில் (டூத்-பேஸ்ட்களில்) சேர்க்கப்படுகிறது.
பஜ்ஜி பிரியரா நீங்கள்? வாழைக்காய், மிளகாய் பஜ்ஜி சரி, கற்பூரவள்ளி பஜ்ஜி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கற்பூரவள்ளி இலைகளால் செய்யப்படும் ’கற்பூரவள்ளி பஜ்ஜி’ ரெசிப்பி, பல ஹோட்டல்களில் இப்போதெல்லாம் ஸ்பெஷல் மெனு.
அசைவ உணவுகள் சமைக்கப்படும்போது, இதன் இலைகளைச் சேர்த்து சமைக்க, செரியாமை தொந்தரவுகள் உண்டாகாது. உண்ட உணவு செரிக்காமல் `கடமுட’ ஓசை எழுப்பும்போது, கற்பூரவள்ளி சாற்றை, நீரில் கலந்து பருகுங்கள். ஓசை அலட்டல் இல்லாமல் அடங்கிவிடும். கொசுக்கள் வராமல் தடுக்கும் மூலிகைகளுள் கற்பூரவள்ளியும் ஒன்று.
வீடுகளில் கற்பூரவள்ளியை வளர்த்து வர, அது உண்டாக்கும் வாசனையே உங்கள் மனதை மயக்கிவிடும்.