Doctor Vikatan: எனக்கு பிரசவமாகி 5 வருடங்களாகின்றன. இன்னும் பிரசவமான தழும்புகள் வயிற்றில் மறையாமல் இருக்கின்றன.
அவற்றை நிரந்தரமாக நீக்க முடியுமா..? என்னுடைய தங்கைக்கு உடல் எடை குறைத்ததன் விளைவாக தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் தழும்புகள் இருக்கின்றன. அதையும் நீக்க முடியுமா?
பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல் மருத்துவருமான நித்யா ரங்கநாதன்.
முதலில் ஸ்ட்ரெச் மார்க் எனப்படும் தழும்புகள் ஏன் ஏற்படுகின்றன எனப் புரிந்துகொள்ளுங்கள். சருமமானது அளவுக்கு அதிகமாக விரிவடைவதால், அதன் எலாஸ்டிசிட்டி போய், தசைநார்கள் உடைவதாலேயே ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் வயிற்றுத் தசைகள் மெள்ள மெள்ள விரிவடையத் தொடங்கும். அதனால் சருமம் விரிவடைந்து எலாஸ்டிக் தன்மையை இழந்து தழும்புகள் உருவாகக் காரணமாகிறது. கர்ப்பிணிகளுக்கு மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் இப்படி சருமத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரலாம். உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் திடீரென உடல் எடை குறைப்பவர்களுக்கும் இது சகஜம். திடீரென ஜிம் போய் எடையைத் தூக்கி வொர்க் அவுட் செய்வோருக்கு ஸ்ட்ரெச் மார்க் வரலாம்.
ஸ்ட்ரெச் மார்க்கில் பிங்க் நிற ஸ்ட்ரெட்ச் மார்க், வெள்ளை நிற ஸ்ட்ரெச் மார்க் என இரண்டு உண்டு. பிங்க் நிற ஸ்ட்ரெச் மார்க் என்பது ஆரம்ப நிலையில் இருப்பதால் அதற்கு சிகிச்சை அளிப்பதும் சற்று சுலபமாக இருக்கும். வெள்ளை நிற ஸ்ட்ரெச் மார்க் என்பது தசை நார்கள் உடைவதால் ஏற்படுவது. அது கிட்டத்தட்ட நிரந்தர தழும்பாகவே மாறிவிடும்.
ஸட்ரெச் மார்க்கை 100 சதகிவிதம் நீக்கிவிட முடியுமா என்றால் முடியாது. இதைத் தவிர்க்கலாமே தவிர ரிவர்ஸ் செய்ய வாய்ப்பில்லை. கர்ப்ப காலத்தில் 3-வது மாதத்தில் இருந்தே சருமத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்து அதை வறட்சியின்றி வைத்துக்கொள்ள வேண்டும். செராமைடு உள்ள மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பது சிறந்தது.
வெயிட்லாஸ் முயற்சியில் இருப்போருக்கும் இது முக்கியம். வெயிட் லிஃப்டிங் செய்வது, ஜிம்முக்குச் செல்வதற்கு முன்பு சருமத்தை நன்கு மாய்ஸ்ச்சரைஸ் செய்ய வேண்டும். திடீரென எடையைக் குறைப்பது ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும். ஏற்கெனவே சொன்னதுபோல ஸ்ட்ரெச் மார்க்கை முழுமையாக நீக்க முடியாது. அதன் வீரியத்தை சற்றுக் குறைக்கலாம். மருத்துவரிடம் சென்று எடுத்துக்கொள்ளும் சிகிச்சை, வீட்டிலேயே பின்பற்றும் சிகிச்சை என இதற்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன. கெமிக்கல் பீல், மைக்ரோ நீட்லிங் உள்ளிட்ட லேசர் சிகிச்சைகள் உள்ளன.
இந்தச் சிகிச்சைகளாலும் உங்கள் தழும்புகளை 100 சதவிகிதம் ரிவர்ஸ் செய்ய முடியாது உங்கள் உடலின் தன்மை, கொலாஜென் அளவு, ஸ்ட்ரெச் மார்க்கின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து இது தீர்மானிக்கப்படும். ஸ்ட்ரெச் மார்க் பிரச்னை உங்களை ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாக்குவதாக நினைத்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.