சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் கண் கலங்கிய பிரதமர் மோடி..!
பாராளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், 2-வது நாளாக பிரதமர் மோடி நேற்று மீண்டும் தமிழகம் வந்துள்ளார். கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த மோடி, கார் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தார். விழா மேடை வரை திறந்த வாகனம் மூலம் பிரதமர் மோடி வருகை தந்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டு இருந்த பா.ஜ.க.வினர் மோடியை பார்த்ததும் உற்சாகம் அடைந்து மோடி..மோடி என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மோடி, பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே வாசன், ஏ.சி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
பின்னர் பிரசாரக் பிரதமர் மோடி நேற்று 1 மணியளவில் அவர் பேசியதாவது., தமிழகத்தில் பா.ஜ.க.வும் எனக்கும் கிடைக்கும் வரவேற்பை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் என்டிஏ கூட்டணி கட்சிக்கும் கிடைக்கும் ஆதரவை பார்த்து தி.மு.க.வின் தூக்கமே போய்விட்டது. தமிழ்நாடு மக்கள் ஒரு முடிவு செய்துவிட்டார்கள். ஏப்ரல் 19-ம் தேதி விழுகின்ற ஓட்டு எல்லாம் பா.ஜ.க.வுக்கு தான். தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான். தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டனர். தமிழக மக்களின் ஆதரவால் இந்த முறை பா.ஜ.க. கூட்டணி 400 ஐ தாண்டும். 400 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். கோட்டை மாரியம்மன் மண்ணிற்கு வந்திருப்பது பெருமையளிக்கிறது.
கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்து விட்டார்கள். ஆடிட்டர் ரமேஷ் உள்பட பா.ஜ.க நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இந்து மதத்தை விமர்சிக்கும் இன்டியா கூட்டணி மற்ற மதத்தையோ, மற்ற மதத்தினரையோ விமர்சிப்பதில்லை. உலகின் மிகவும் மூத்த மொழி தமிழ். இந்தியாவுக்கு தமிழ் மொழியால் பெருமை. தமிழ் மொழியின் பெருமையை உலகம் அறிய செய்வேன். இது எனது வாக்குறுதி.
தி.மு.க.வும், காங்கிரஸின் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஊழலும், குடும்ப ஆட்சியும் செய்பவர்கள். தமிழகத்தில் தி.மு.க. 5ஜி நடத்தி வருகின்றது. அவர்களின் 5-வது தலைமுறையை ஆட்சிக்கு வர வேலை செய்கிறார்கள். மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை நினைவு கூர்கிறேன். அவர் மனது வைத்திருந்தால் பிரதமராகி இருப்பார். ஆனால், காங்கிரஸ் குடும்ப ஆட்சி அவரை வளரவிடவில்லை. தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் காமராஜர். அரசியலில் நேர்மை என்றால் காமராஜர். அவர் உருவாக்கிய மாணவர் மதிய உணவுத் திட்டம் மிகப்பெரியது. ஏழை எளிய மாணவர்களுக்கு அவர் ஏற்படுத்திய இந்த திட்டம், மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்குவதற்கான வழிகாட்டுதலாக இருந்தது.ராமதாஸ், அன்புமணியின் அனுபவம் பா.ஜ.க.விற்கு உதவியாக இருக்கும் என்றார்.
பிரதமர் மோடி பேசும் போது, ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து நா தழுதழுக்கப் பேசி கண் கலங்கினார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. பா.ஜ.க.விற்காக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள் எனத் தெரிவித்தார்.