அதிக நாட்கள் வாழ ஆசையா? அப்போ ‘இதை’ கண்டிப்பாக சாப்பிடவும்!
பலருக்கு தனது வாழ்நாளை நீட்டிக்க வேண்டும் என்றும், ஆராேக்கியமான வாழ்க்கையை பேண வேண்டும் என்றும் ஆசை இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை மனிதனின் சராசரி ஆயுட்காலம், 70 வயதாக இருக்கிறது. இதைத்தாண்டி யாரேனும் அதிக வருடங்கள் வாழ்ந்தாலும் அது அதிசயமாக பார்க்கப்படுகிறது. பலர், இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதும், திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து உயிரிழப்பதும் அடிக்கடி பார்க்கும் செய்தி ஆகிவிட்டது. இதற்கு உடல் எடை அதிகரிப்பு, நாம் வாழும் சூழல், உணவு பழக்க வழக்கங்கள் என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகின்றனர் மருத்துவர்கள். இவையனைத்தையும் தவிர்த்து, நீண்ட காலம் உயிர்வாழ பலருக்கு ஆசை இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள், சாப்பிட வேண்டிய உணவுகள் சில இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை பார்ப்போமா?
பீன்ஸ்:
பல்வேறு வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் காய்கறிகளுள் ஒன்று, பீன்ஸ். இதில், உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு சத்துகள் நிறைந்திருக்கின்றன. இது, தாவரத்தில் இருந்து வளரும் காய்கறி என்பதால் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் சத்துகளும் இதில் நிறைந்திருக்கிறது. தாவரத்தில் வளரும் காய்கறிகளை டயட்டில் சேர்த்துக்கொள்பவர்களை வைத்து ஒரு மருத்துவ ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், பீன்ஸ் காய்கறியை சாப்பிடுபவர்கள் ஆயுட்காலம் அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பச்சை நிற காய்கறிகள்:
இதனை ஆங்கிலத்தில் Cruciferous Vegetables என்று கூறுகின்றனர். பிரக்கோலி, காளி ஃப்ளவர், முட்டைகோஸ் உள்ளிட்டவை இந்த வகைக்கு கீழ் வருகின்றன. இந்த காய்கறிகள், நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக உதவி புரியுமாம். அது மட்டுமன்றி, இவற்றை சாப்பிடுவதால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த காய்கறிகள் ஆயுளை அதிகரிக்கவும் உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெர்ரி பழங்கள்:
பெர்ரி பழங்கள், இதய நோய் கோளாறுகள், புற்றுநோயை சமாளிப்பது, வயிற்று அழற்சியை தவிர்க்கவும் உதவுகிறது. 70 வயது நிரம்பியவர்களை வைத்து அமெரிக்காவில் ஒரு மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், பெர்ரி பழம் சாப்பிடுவது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுவதும், உடலை பலமாக வைத்திருக்க உதவுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வால் நட்ஸ்:
வால் நட்ஸில் எண்ணிலடங்காத அளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வயதாகும் போது வரும் உடல் நலக்கோளாறுகளும் அண்டவிடாமல் தடுக்கிறதாம். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த வால் நட்ஸ்களை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், இதை சாப்பிடுபவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கிறதாம்.
சால்மன் மீன்கள்:
சால்மன் வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு, குறைவான புரதம், வைட்டமின் பி சத்துகள் ஆகியவை உள்ளன. மேலும், இரும்பு சத்து, நோயெதிர்ப்பு சத்து ஆகியவை நிரம்பியுள்ளதால் இது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
கிரீன் டீ:
கிரீன் டீயை குடிப்பதால் உடல் எடை குறையும் என்றும், உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் பலர் கூற கேட்டிருப்போம். இது, உண்மை என்கின்றனர் மருத்துவர்கள். இதை குடிப்பதால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர், மருத்துவர்கள். இதை குடிப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணிக்காக்க உதவும்.