Kanguva teaser: சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசரை வெளியானது
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகளை நெருங்கி உள்ளது. கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா படம் 10 இந்திய மொழிகளில் 3டியில் வெளியாகிறது. அதுமட்டுமின்றி ‘கங்குவா’ திரைப்படம் மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்கு இடையே நடக்கும் கதை போல் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் அறிமுகமாகும் படம் கங்குவா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா, தீபா வெங்கட், ஜெகபதி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் முன்பே வெளியிட்டனர். அதில் சூர்யா இதுவரை இல்லாத ஒரு புதிய தோற்றத்தில் காணப்பட்டார்.
மேலும், படக்குழுவினர் சமீபத்தில் சூரியாவின் (Actor Suriya) புதிய போஸ்டரை வெளியிட்டனர். அதில் பழங்குடி போர்வீரன் அவதாரத்தில், வெற்றி சங்குகளை ஊதிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு மத்தியில் சூர்யா இருப்பது போல் இருந்தது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா, வி வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலப்டி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர். தற்போது, ’கங்குவா’ (Kanguva Teaser) படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, தற்போது சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிணங்கள், ரத்தம், சண்டைக்காட்சிகள், ஆக்ரோஷம், போர் என மொத்த டீசரும் அதிரடியாக உள்ளது. சூர்யாவின் அறிமுகமும் தோற்றமும், ஈர்க்கும் அளவுக்கு இணையாக பாபி தியோல் படத்தின் மீதின் ஆவலைக் கூட்டுகிறது. அதேபோல தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. தற்போது டீசர் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
கங்குவா படத்தில் வித்தியாசமான பல ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மரக்கிளைகளின் மேல், நீருக்கடியில், மணல் நிறைந்த கடற்கரை மற்றும் படகுகளை உள்ளடக்கிய ஒரு நடுக்கடல் ஸ்டண்ட் என படம் முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்துள்ளது. கங்குவா படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தை ஓட்டி திட்டமிடப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ள சூர்யா, அடுத்ததாக சுதா கங்குரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணைய உள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.