IPL 2023, RCB: சாம்பியனான ஆர்சிபி மகளிர் அணியினருக்கு ராஜ மரியாதை கொடுத்த ஆர்சிபி மென்ஸ் டீம்!
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் இன்னும்3 நாட்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த சீசன் கார சாரமாக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும், ஒருமுறை கூட டிராபியை கைப்பற்றாத ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னையின் கோட்டையான சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்காக ஆர்சிபி வீரர்கள் தங்களது கோட்டையான பெங்களுரூ சின்னச்சாமி மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்திற்கு வந்த ஆர்சிபி மகளிர் அணியினருக்கு ஆர்சிபி ஆண்கள் அணியினர் ராஜ மரியாதை அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 113 ரன்கள் மட்டுமே எடுக்கவே, பின்னர் விளையாடிய ஆர்சிபி 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
https://twitter.com/CricCrazyJohns/status/1770119967637454976
ஐபிஎல் தொடரில் இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஒரு சீசன்களில் கூட ஆர்சிபி டிராபியை கைப்பற்றாத நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனிலேயே ஆர்சிபி மகளிர் அணியானது டிராபியை கைப்பற்றி புதிய அத்தியாயம் படைத்துள்ளது.
ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன், பாப் டூப்ளெசிஸ் ஆகியோர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. ஆனால், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் ஆர்சிபி அணியானது டிராபியை கைப்பற்றி சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் சாம்பியனான ஆர்சிபி மகளிர் அணிக்கு ஆர்சிபி மென்ஸ் அணி சிறப்பு கௌரவம் அளித்துள்ளது.