மார்ச் 23.. எர்த் ஹவர்.. பொதுமக்கள் அத்தியாவசியற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டும்.. BSES வேண்டுகோள்..
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள மின் பகிர்மான நிறுவனங்கள் மார்ச் 23 இரவு ஒரு மணி நேரம் அத்தியாவசியமற்ற விளக்குகள் மற்றும் மின்சாதனங்களை அணைக்கும் படி தங்கள் நுகர்வோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இதன் மூலம் டெல்லி மக்கள் ‘எர்த் ஹவர்’ வெற்றிபெற தயாராகி வருகின்றனர். டெல்லியில் வசிக்கும் தனது 50 லட்சம் நுகர்வோரும் இதில் பங்கேற்குமாறு BSES மின் பகிர்மான நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. உலகளாவிய நிதியம் (WWF) மின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எர்த் ஹவர் என்ற புவி நேரத்தை கடைபிடித்து வருகிறது.
இது குறித்து BSES மின் பகிர்மான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பேசிய போது, எர்த் ஹவர் காரணமாக கடந்த ஆண்டு டெல்லியில் 279 மெகாவாட் சேமிக்கப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் “ எர்த் ஹவரின் ஒரு பகுதியாக, டெல்லிவாசிகள் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் லண்டன், ஹாங்காங், சிட்னி, ரோம், மணிலா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நகரங்களில் வசிக்கும் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் இணைய உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த எர்த் ஹவரில் சுற்றுச்சூழலுக்கான தங்கள் அக்கறையைக் காட்டும் வகையில் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைக்க முடிவு செய்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ 2024 ஆம் ஆண்டு புவி மணிநேரத்தில் பங்கேற்பதன் மூலம் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உலகத்துடன் ஒன்றிணையுமாறு டெல்லி மக்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் இந்த ஆண்டு, மார்ச் 23 சனிக்கிழமை இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, அத்தியாவசியமற்ற மின் சாதனங்களை ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்வதாக உறுதிமொழி எடுப்போம். நிலையான எதிர்காலத்திற்கான நமது உறுதிப்பாட்டைப் பற்றிய சக்திவாய்ந்த செய்தியை அனுப்ப ‘ஸ்விட்ச் ஆஃப்’ மற்றும் ‘பூமிக்கு ஒரு மணிநேரம் கொடுங்கள்’ என்று உறுதிமொழி எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
Tata Power Delhi Distribution Limited (TPDDL) செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பேசிய போது, “ எங்கள் நிறுவனம் 1.9 மில்லியன் மக்கள் நுகர்வோருடன் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் புவி மணிநேரத்தில் சேர தயாராகி வருகிறது. எங்கள் பணியாளர்கள், 1.9 மில்லியன் நுகர்வோர் மற்றும் எங்கள் செயல்பாட்டு பகுதியில் உள்ள 7 மில்லியன் குடியிருப்பாளர்கள் ஆகியோருடன் ஆற்றல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்,” என்று கூறினார். பூமி நேரத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கும் வகையில் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு நாங்கள் கடிதங்களை அனுப்பி உள்ளோம்” என்று கூறினார்.