டிக்கெட் பணத்தை விடுங்க.. ரயில்வே துறை “இப்படியெல்லாம்” சம்பாதிக்கிறதா..?
டெல்லி: இந்திய ரயில்வே துறை தினந்தோறும் சுமார் 20 லட்சம் பயணிகளை சுமந்து செல்கிறது. இதன் மூலம் டிக்கெட் தொகை, பிளாட்பார்ம் டிக்கெட், சரக்கு போக்குவரத்து என கோடிக்கணக்கில் ரயில்வே துறை சம்பாதித்து வருகிறது. ஆனால் டிக்கெட் கேன்சல் செய்வது மூலம் ரூ.1,229.85 கோடி பணத்தை சம்பாதித்தது உங்களுக்கு தெரியுமா..?
2021 முதல் 2024 ஜனவரி மாதம் வரை இந்திய ரயில்வே காத்திருப்பு பட்டியல் இருக்கும் நபர்கள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக ரூ.1,229.85 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்திய ரயில்வேயின் வருமானம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் இந்த ஆர்டிஐ கேள்வி மூலம் தெரியவந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2.53 கோடி வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்த டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.242.68 கோடி வருவாய் இந்திய ரயில்வேக்கு கிடைத்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்த 4.6 கோடி டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டன. இதன்மூலம் இந்திய ரயில்வேக்கு ரூ.439.16 கோடி வருமானம் கிடைத்தது.
2023 ஆம் ஆண்டில் கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்களின் எண்ணிக்கை 5.26 கோடியாக அதிகரித்தது. இதன் மூலம் இந்திய ரயில்வேக்கு ரூ.505 கோடி வருவாய் கிடைத்தது. 2024 ஜனவரியில் 45.86 லட்சம் டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டன. இதிலிருந்து ரூ.43 கோடி வருமானம் வந்துள்ளது.
ரயில் சீட் கெப்பாசிட்டிக்கும் பயணிகளின் டிமாண்டுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது, இதனால் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதை ரயில்வே நன்றாக ஆய்வு செய்து, காத்திருப்பு பட்டியல் ஒதுக்கீடுகளை அதற்கேற்ப சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
எடுத்துக்காட்டாக, 720 ஸ்லீப்பர் பெட்டி இருக்கைகள் மட்டுமே உள்ள 18 பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு 600 காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளை ஒதுக்குவதால் சீட்டு கிடைக்காமல் டிக்கெட்களை கேன்செல் செய்யும் நிலையை உருவாக்குகிறது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் நவம்பர் 17 வரையிலான தீபாவளி வாரத்தில், உறுதி செய்யப்பட்ட, ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான முன்பதிவு (ஆர்ஏசி) மற்றும் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளை உள்ளடக்கிய 96.18 லட்சம் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டது.
ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தின் தரவுகளின்படி, இந்த ரத்துசெய்தல்களில் கிட்டத்தட்ட பாதியளவு, மொத்தம் 47.82 லட்சம், அனைத்து ஒதுக்கீட்டிலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளிடமிருந்து வந்தவை.
இந்த காலகட்டத்தில், காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த ரத்து கட்டணங்கள் மூலம் ரயில்வே 10.37 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
ஆர்ஏசி/காத்திருப்புப் பட்டியலிடப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்தால், திரும்பப்பெறும் தொகையில் ஒரு பயணிக்கு ரூ.60 கழிக்கப்படும். கூடுதலாக, ஐஆர்சிடிசி ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள் மூலம் வாங்கப்படும் இ-டிக்கெட்டுகள் திரும்பப்பெற முடியாத சேவைக் கட்டணங்களுக்கு உட்பட்டது.
இது நெட் பேங்கிங் அல்லது கார்டுகள் மூலம் முன்பதிவு செய்யும் போது ஏசி வகுப்புகளுக்கு ரூ.30 மற்றும் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20. ஏசி அல்லாத வகுப்புகளுக்கு, நெட் பேங்கிங் அல்லது கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ₹15 மற்றும் யூபிஐ முன்பதிவுகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.10 என சேவைக் கட்டணம் உள்ளது.