சென்னை-க்கு வந்த Fusion CX.. ஆரம்பமே அதிரடி 650 பேருக்கு வேலை..!
சென்னை ஐடி மற்றும் டெக் நிறுவனங்களுக்கு மிகவும் விருப்பமான நகரமான இருக்கும் வேளையில் 14 நாடுகளில் சுமார் 28க்கும் அதிகமான அலுவலகங்களை வைத்துக்கொண்டு இயங்கி வரும் Fusion CX சென்னையில் முதல் முறையாகத் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது.
வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடு (CX) மற்றும் வணிக செயல்முறை மேலாண்மை (BPM) தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Fusion CX, சென்னையில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம், Fusion CX நிறுவனம் வட இந்திய வர்த்தகத்தைத் தாண்டி தென்னிந்தியச் சந்தையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
இந்நிறுவனம் தற்போது 12,000 சதுர அடி பரப்பளவில் புதிய வளாகத்தில், 350 இருக்கைகள் கொண்ட இரு ஷிப்ட்டுகளில் 650 பணியாளர்கள் பணியாற்றும் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, 150 பணியாளர்கள் ஏற்கனவே இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கூடுதலாக 500 புதிய பணியாளர்களை ஜூன் மாத இறுதிக்குள் இணைப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் Fusion CX நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல மொழிகளில் பல்வேறு பிரிவுகளில் வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மை, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் மேக் ஆபீஸ் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு இந்த புதிய அலுவலகம் சகல தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
Fusion CX நிறுவனம் சென்னை அலுவலகத்தில் ஹெல்த் கேர், BFSI, ஹை-டெக், ரீடைல் துறை மற்றும் மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தனது வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடு (CX) மற்றும் வணிக செயல்முறை மேலாண்மை (BPM) சேவைகள் வழங்க உள்ளது.
Fusion CX நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் இணை நிறுவனர் கிஷோர் சாரோகி கூறுகையில், “இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்து, நாடு முழுவதும் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் முக்கிய சந்தைகளில் நுழைவதில் கவனம் செலுத்த உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.