அமெரிக்க பெடர்ல் ரிசர்வ்: பென்ச்மார்க் வட்டியில் மாற்றமில்லை.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!
உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க மத்திய வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் முடிந்து, அதன் முடிவுகள் வெளியானது. அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து, வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும், நுகர்வு சந்தையில் பழைய நிலைக்குத் திரும்பவில்லை.
இதனால் இந்த கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்தை கணிப்புகளுக்கு இணங்க அமெரிக்க மத்திய வங்கியின் FOMC கூட்டத்திற்குப் பின்னர் பேசிய பெடரல் ரிசர்வ் கவர்னர் ஜெரோம் பவல், வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதாக அறிவித்தார்.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தொடர்ந்து ஐந்தாவது கூட்டமாக, வட்டி விகிதத்தை 5.25% முதல் 5.50% வரை மாற்றமின்றி வைத்துள்ளது. இந்த முடிவு, பங்குச் சந்தை நிபுணர்களின் கணிப்புகளுக்கு ஏற்ப உள்ளதால் சந்தையில் பெரும் சலசலப்பு இல்லாமல் உள்ளது
அமெரிக்க பங்குச்சந்தையில் தற்போது டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக் 100, எஸ் அண்ட் பி 500, எஸ் அண்ட் பி 100 என அனைத்து முக்கிய குறியீடுகளும் உயர்வுடனே காணப்படுகிறது. பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு பங்குச்சந்தை முன்கூட்டியே தயாராகியுள்ளது இதன் மூலம் தெரிகிறது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை வகுக்கும் குழுவின், இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று நிறைவு பெற்றது. இதில், அமெரிக்க பென்ச்மார்க் வட்டி விகிதம் 23 வருட உயர்ந்த நிலையில் (5.25% முதல் 5.50%) மாற்றமின்றி வைத்திருக்க அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக வாக்களித்துக் குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்காவின் பணவீக்கம் நிலையான முறையில் 2% அளவில் தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கை கிடைக்கும் வரை, வட்டி விகிதத்தைக் குறைப்பது சாத்தியம் இல்லை, நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்புடையதாக இருக்காது என பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு தெரிவித்துள்ளது.
2022 மார்ச் மாதத்திலிருந்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க மத்திய வங்கி பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 5.25 சதவீத புள்ளிகள் உயர்த்தியது. தற்போது, பணவீக்கம் இலக்கு மதிப்பை நெருங்கி வருவதால், ஜூலை மாதத்திலிருந்து வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது. மேலும் 2024ல் மட்டும் 3 முறை வட்டி விகிதம் குறைக்கப்படலாம் எனக் கணிக்கப்படுகிறது.
வட்டி விகித அறிவிப்பு வந்த உடன் கணிக்கப்பட்ட படி தங்கம் விலை உயர் துவங்கியது, நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2155 டாலருக்கு வர்த்தகமான நிலையில் தற்போது 2180 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.