ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி விகிதம் பெற்றுள்ள டாப் 10 கேப்டன்கள்.. முதலிடம் தோனிக்கு கிடையாது
ஐபிஎல் தொடர் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் யார் என்றால் நாம் அனைவருமே தோனி மற்றும் ரோகித் சர்மாவை தான் சொல்வோம். இது அவர்கள் எவ்வளவு கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள், எத்தனை போட்டிகளை வென்று இருக்கிறார்கள் என்பதை வைத்து சொல்லக்கூடியது.
ஆனால் வெற்றி விகிதம் என்ற முறையில் யார் வெற்றிகரமான கேப்டன் என்பதை தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விட்டோரி.
இவர் 22 போட்டிகளில் ஆர் சி பி அணியின் கேப்டனாக இருந்தார். இவருடைய வெற்றி விகிதம் 54.54 சதவீதமாக இருக்கிறது. இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த். இவர் முப்பது போட்டிகளில் கேப்டனாக இருந்து 55 சதவீதம் வெற்றி விகிதங்களை பெற்றிருக்கிறார்.
இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருப்பவர் கௌதம் கம்பீர். இவர் டெல்லி மற்றும் கொல்கத்தா அணி என 129 போட்டிகளில் கேப்டனாக இருந்து வெற்றி விகிதமாக 55.42 சதவீதத்தை பெற்றிருக்கிறார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருப்பவர் வார்னே, இவர் 55 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து 55.45 வெற்றி சதவீதத்தை பெற்றிருக்கிறார்.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் மும்பை இந்தியன்ஸ் அனியின் கேப்டன் ரோகித் சர்மா. இவர் 158 போட்டிகளில் கேப்டனாக இருந்து 87 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இவருடைய வெற்றி சதவீதம் 56.32 ஆக இருக்கிறது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆர்சிபி அணியின் கேப்டன் அணில் கும்ப்ளே. இவர் 26 போட்டிகளில் கேப்டனாக இருந்து 57.69 வெற்றி விகிதத்தை பெற்றிருக்கிறார்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கர் பெற்றிருக்கிறார். இவர் 51 போட்டிகளில் கேப்டனாக இருந்து 58.82 சதவீத வெற்றியை பெற்று இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி. இவர் 226 போட்டிகளில் கேப்டனாக இருந்து 133 வெற்றிகளை பெற்றிருக்கிறார்.இவருடைய வெற்றி சதவீதம் 59.37.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித். இவர் மூன்று அணிகளுக்கு சேர்த்து ஐபிஎல் தொடரில் 43 போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். இதில் இவருடைய வெற்றி சதவீதம் 59.52 ஆகும். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ஹர்திக் பாண்டியா. இவர் 31 போட்டிகளில் கேப்டனாக குஜராத் அணிக்காக செயல்பட்டிருக்கிறார். இவருடைய வெற்றி விகிதம் 73.3 சதவீதமாக இருக்கிறது.