கேரளாவில் இருந்து இந்திய அணியில் இடம் பிடிப்பது சவாலான காரியம்.. சஞ்சு சாம்சன் தடாலடி
இந்திய கிரிக்கெட் அணியில் தாம் தேர்வு செய்யப்படாதது குறித்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன், இதுவரை 16 ஒரு நாள் போட்டி மற்றும் 25 சர்வதேச டி20 போட்டிகள் மட்டும் தான் விளையாடி இருக்கிறார்.
சஞ்சு சாம்சன் போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் 9 ஆண்டுகளில் இவ்வளவு குறைவாக தான் விளையாடி இருக்கிறார்கள் என்றால் அவருக்கு அந்த அளவுக்கு அணியில் இடம் தரப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் திறம்பட செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரை முன்னிட்டு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்று இந்திய அணியில் இடம் பிடிப்பது எவ்வளவு கடுமையான விஷயம் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார். அதில் கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த அணிக்காக நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றால் நீங்கள் கடும் போட்டிகளை சந்திக்க நேரிடும்.
கிரிக்கெட்டில் இந்தியா தான் நம்பர் ஒன் அணி. இங்கு பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இங்கு கேரளாவில் இருந்து ஒரு இளைஞன் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் அவர் ஏதேனும் ஸ்பெஷலான விஷயங்களை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சஞ்சு சாம்சனின் இந்த பேச்சு அவருடைய மன வலியை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
கேரளாவில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பதைத்தான் மறைமுகமாக சஞ்சு சாம்சன் சாடி இருப்பதாக பலரும் அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் தொடர்ந்து பேசிய சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சிக்சர் அடிப்பதற்காக ஏன் ஒரு பத்து பந்துகளை வீணடிக்க வேண்டும். முதல் பந்திலே சிக்ஸர் அடிப்பதில் என்ன தவறு இருக்கிறது.
அப்படி ஒரு மனநிலையில் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அதிரடியாக ஆடுவதற்கான பயிற்சிகளை நான் எடுத்து வருகிறேன். கொரோனா காலத்தில் இதற்காக நான் கடுமையாக உழைத்தேன். எனக்கு பலர் உதவி செய்தார்கள் நான் எவ்வளவு நன்றாக விளையாடினாலும், அது எனக்கு மன நிறைவை தராது. நான் எந்த அணிக்காக விளையாடுகிறேனோ அந்த அணிக்காக சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.