கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மீன்குழம்பு பல வகைகளிலும் செய்யலாம்.
பாரம்பரிய முறையில் கேரளா ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கானாங்கெளுத்தி மீன் – 1 கிலோ
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 20 பல்
இஞ்சி – 1 பெரிய துண்டு
மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 ½ தே.கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
வெந்தயம் – 1 தே.கரண்டி
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – 3 கொத்து
உப்பு – 1 தே.கரண்டி
குழம்பு தாளிக்க தேவையானவை
தேங்காய் எண்ணெய் – 1 தே.கரண்டி
சின்ன வெங்காயம் – 7
காய்ந்த சிகப்பு மிளகாய் – 4
கடுகு – 3/4 தே.கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் புளியை ஊறவைத்து கரைத்து அதன் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துகொள்ள வெண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பெடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளியை சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் வதக்கிய சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பேஸ்ட்டாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் மண் சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து பொறிய விட வேண்டும்
பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த வெங்காயம், தக்காளி பேஸ்ட் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
குழம்பு நன்றாக வெந்ததன் பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் மூடி வைத்து 6 முதல் 7 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விட்டு
இறுதியாக சுத்தம் செய்து வைத்திருக்கும் கானாங்கெளுத்தி மீனை போட்டு மூடி 5 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.
குழம்பு சரியான பதத்துக்கு வந்ததன் பின்னர் அடுப்பை அணைத்து விட்டு.
பின்னர் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பெறியவிட்டு
பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இரண்டாக கிள்ளிய காய்ந்த சிகப்பு மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி இந்த தாளிப்பை மீன் குழம்பில் சேர்த்து கலந்துவிட்டால் சுவையான கேரளா ஸ்டைல் மீன் குழம்பு தயார்.