Vijay: சேட்டா, சேச்சீஸ்.. மலையாளத்தில் பேசி கேரள ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் – வைரல் வீடியோ இதோ
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சினேகா, அஜ்மல், பிரபுதேவா, லைலா, பிரசாந்த், நிதின் சத்யா, மைக் மோகன், வைபவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்ட இருக்கின்றனர். கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் கேரளாவில் உள்ள க்ரீன் ஃபீல்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதுமட்டுமின்றி கோட் படத்தின் படப்பிடிப்பு ஸ்டேடியத்தில் நடப்பதை அறிந்த ரசிகர்கள் தினந்தோறும் அந்த மைதானம் முன்பு குவிந்து வருகின்றனர். தன்னைக் காண குவிந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களை திருப்திபடுத்த, நேற்று அங்குள்ள வேனின் மீது ஏறி அவர்களிடம் மலையாளத்தில் உரையாடி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தளபதி விஜய். ஓணம் பண்டிகைக்கு நீங்கள் எல்லாம் எந்த அளவு சந்தோஷமாக இருப்பீர்களோ அதே அளவு சந்தோஷத்தில் தற்போது நான் இருக்கிறேன் என பேசி ரசிகர்களை நெகிழ வைத்தார் தளபதி.
மைதானம் மட்டும் அல்லாமல் விஜய் தங்கி இருக்கும் ஓட்டலிலும் அவரைக் காண ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். இதை அறிந்த விஜய் அவர்களை பார்த்து கையசைத்தபடி நன்றி தெரிவித்தார். அந்த கூட்டத்தில் ஒருவர் தனக்காக மாலை கொண்டுவந்ததை அறிந்த விஜய், அவரிடம் நேரில் சென்று அந்த மாலையை அணிவிக்குமாறு கூறி வாங்கிக் கொண்டார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.