மேகதாது அணை: திமுக தேர்தல் அறிக்கையால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரிய அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் இருக்கிறது. ஆனால், மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை எனவும், தமிழக அரசின் கருத்தை கேட்காமலேயே அடுத்த கட்ட ஒப்புதலுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கர்நாடக அரசு கோரி வருகிறது.
அதன்படி, கடந்த ஆண்டு கர்நாடக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அனைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமித்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேகதாது அணை கட்டும் முயற்சி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை காக்கவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கவும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கையை திமுக எடுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இதில், பிராந்திய கட்சிகள் பல உள்ளன. சில கட்சிகள் சித்தாந்த ரீதியாக எதிரும்புதிருமானவை. இந்தியா கூட்டணியில் திமுக பிரதான கட்சியாக உள்ளது. தமிழகத்தில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அம்மாநில அரசும் மேகதாது அணை கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியா கூட்டணியில் இருக்கும் இரு வேறு கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுக்கிறது. திமுக இங்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறது,. அங்கே கர்நாடகத்தில் காங்கிரஸ் அணையை கட்டியே தீருவோம் என்கிறது. இந்த சூழலில், மேகதாது அணை கட்டும் முயற்சி நிறுத்தப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கை இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையை வைத்து அங்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.